Paristamil Navigation Paristamil advert login

சந்திரனில் 40 சென்ரிமீற்றர் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர்: புதிய இடத்திலும்  ஆய்வுக்கருவிகள் சோதனை

சந்திரனில் 40 சென்ரிமீற்றர் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர்: புதிய இடத்திலும்  ஆய்வுக்கருவிகள் சோதனை

6 புரட்டாசி 2023 புதன் 08:51 | பார்வைகள் : 3020


சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.  இது சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தனது கட்டளைகளின்படி, விக்ரம் லேண்டரின் என்ஜின்கள் இயங்க ஆரம்பித்து, எதிர்பார்க்கப்பட்டவாறு 40 சென்ரிமீற்றர் உயரத்துக்கு அந்த லேண்டர் கிளம்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர், 30 முதல் 40 சென்ரிமீற்றர் அளவிலான தூரம் நகர்ந்து மீண்டும் சந்திரனின் தரையில் அது இறங்கியது. என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று முற்பகல் தெரிவித்தது.

இது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் சந்திரனில் மேற்கொண்ட இரண்டாவது ‘மென் தரையிறக்கம்’ எனவும், இது சந்திரயான் -3 திட்டத்தின் இலக்குகளை விஞ்சிய செயற்பாடு எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனின் தரையிலிருந்தவாறு விக்ரம் தரையிறங்கிக் கலம் மீண்டும் இயங்க ஆரம்பித்து, அக்கலம் தாவி இறங்கியமையானது முக்கியமான ஒரு பரிசோதனையாக கருதப்படுகிறது.

சந்திரனிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் எதிர்காலத் திட்டங்களுக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இப்பரிசோதனைக்கான திட்டம் குறித்து இஸ்ரோ முன்னர் அறிவித்திருக்கவில்லை.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் (தரையிறங்கி) கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் எனும் தரையூர்தி (ரோவர்) வெளியில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

சந்திரனின் தென் துருவத்தில் அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், மங்கனீஸ், டைட்டானியம்,  ஒட்சிசன் உட்பட பல மூலகங்கள் இருப்பது பிரக்யான் ஊர்தியிலுள்ள ஆய்வுக்கருயின் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உறங்கு நிலையில் விக்ரம், பிரக்யான்

இதேவேளை, சந்தியான்-3 திட்டத்தின் இலக்குகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரனில் செப்டெம்பர் 4 ஆம் திகதி சூரியன் மறைய ஆரம்பிக்கும் நிலையில் விக்ரம் மற்றும் பிரக்யானை உறங்கு நிலைக்கு செல்கின்றன அறிவித்துள்ளது.

சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்குச் சமனாகும். இதனால் சந்திரனில் சூரிய ஒளி கிடைக்கும் ஒரு பகல் பொழுது (பூமியில் 14 நாட்கள்) மாத்திரம் விக்ரம் லேண்டர், மற்றும் பிரக்யான் ஊர்தி ஆகியன தரவுகளை அனுப்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த 14 நாட்களுக்கு கருவிகள் இயங்குவதற்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதே இதற்குக் காரணம்.

சந்திரனின் தென் துருவத்தில் மீண்டும் செப்டெம்பர் 22 ஆம் திகதியின் பின்னரே சூரிய ஒளி கிடைக்கலம்.  மீண்டும் சூரிய ஒளி கிடைத்தால் விக்ரம் மற்றும் பிரக்யான் மீண்டும் இயங்க ஆரம்பிக்குமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று பிற்பகல் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட பதிவொன்றில் 'இந்திய நேரப்படி அன்று (திங்கள்) இரவு 8.00 மணி முதல் விக்ரம் உறங்குநிலைக்கு செல்கிறது. அதற்குமுன் விக்ரமின் புதிய இடத்தில் வைத்து, அதன் ஆய்வுக்கருவிகளான சாஸ்ட், ரம்பா-எல், இல்சா (ILSA) ஆகியன பரிசோதனைகளில் ஈடுபட்டன. அவற்றின் தரவுகள் பூமியில் சேகரிக்கப்பட்டன. 

இப்போது அக்கருவிகள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. லேண்டரின் ரிசீவர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரக்யானுக்கு அருகில் விக்ரம் உறங்கும். செப்டெம்பர் 22 ஆம் திகதி அவை மீண்டும் விழித்தெழும் என நம்புகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்