குழந்தைகள் காப்பகங்களின் குளறுபடிகள் வெளியாகியது 'Le Prix Du Berceau' என்னும் நூல்.
6 புரட்டாசி 2023 புதன் 09:19 | பார்வைகள் : 5801
நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் தனியார் குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் அனியாயங்களை வெளிப்படுத்தும் 'Le Prix Du Berceau' (தொட்டிலின் விலை) என்னும் ஆய்வு நூல் கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் வெளியாகியுள்ளது.
பெற்றோர்கள், குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, அல்லது வெளியேறிய; இயக்குனர்கள், பணியாளர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட சாட்சியங்களின் ஒப்புதல் வாக்குமூலங்களுடன் எழுதப்பட்ட 'Le Prix Du Berceau' நூல் தனியார் குழந்தைகள் காப்பகங்களில் நடைபெறும் பல அதிர்ச்சி தரும் அனியாயங்களை வெளிகொணர்ந்துள்ளது.
குறிப்பாக Bouches- de - Rhône பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றிய ஒரு பணியாளர் அளித்த வாக்குமூலத்தில் 'வாரத்தில் இரண்டு நாள் மூன்றில் இருந்து ஐந்து உணவுப் பொட்டலங்கள் குறைவாகவே வரும். நாங்கள் அப்படியான வேளைகளில் ஒரு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை பிரிந்து இரண்டு குழந்தைகளுக்கு கொடுப்போம் ' என பதிவு செய்துள்ளார்.
மற்றுமொரு முன்னாள் குழந்தைகள் காப்பக இயக்குனர் தனது வாக்குமூலத்தில் 'தனியார குழந்தைகள் காப்பகத்தில் காணப்படும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், பணத்தை மிச்சம் பிடிக்கும் முறையாலும். குழந்தைகளுக்கு மாற்ற வேண்டிய 'couches' குறித்த நேரங்களில் மாற்றாமல் மிகமிக தாமதமாகவே மாற்றப்படுவதாகவும், பல தனியார் குழந்தைகள் காப்பகங்களில் பன்னிரண்டு குழந்தைகளை கவனிக்க ஒரேயொரு தகுதிவாய்ந்த பணியாளரே பணியில் அமர்த்தப்படுவதாகவும்' தன் வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.
சரியான சுகாதாரம் இல்லை, முறையான கவனிப்பு இல்லை, குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையான விளையாட்டு பொருட்கள் இல்லை, குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க போதுமான பணியாளர்கள் இல்லை, பல பணியாளர்கள் குறித்த பணியைச் செய்ய முறையான கல்வித் தகமையில்லை. என பல குளறுபடிகள் தனியார் குழந்தைகள் காப்பகங்களில் நடப்பதாக உறுதிப்படுத்தும் குறித்த நூலில், பணத்துக்காக மட்டுமே இயங்கும் இத்தகைய காப்பகங்கள் மிகவும் ஆபத்தானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.