Paristamil Navigation Paristamil advert login

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

 எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

31 வைகாசி 2023 புதன் 09:33 | பார்வைகள் : 7360


ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். 
 
அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.
 
இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார்.
 
இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.
 
இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.
 
இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது..
 
 இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.
 
வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.
 
கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.
 
இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர்.
 
 நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.
 
அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. 
 
அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 
 
தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு? 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்