நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உளுத்தம் பருப்பு வைத்தியம்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8948
மென்மையான கூந்தலை விரும்புகிறவரா நீங்கள்? கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டால் முரட்டுக் கூந்தலும் பட்டுப்போல் மிருதுவாகும்! 15 முழு உளுத்தம் பருப்பை புளித்த தயிரில் இரவே ஊறவையுங்கள். காலையில் அரைத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன், சீயக்காய்த்தூளைக் கலந்து கொள்ளுங்கள்.
வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டை தலைக்குத் தேய்த்து அலசுங்கள். தலைமுடி கண்டிஷனாக இருப்பதுடன், சோர்வு நீங்கி, கண்கள் பளிச்சென்று பிரகாசிக்கும். சிலருக்கு கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருக்கும். கருகருவென இல்லையே என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்கான எளிய வைத்தியம் இது!
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10
இவற்றை புளித்த மோரில் ஊறவைத்து அரையுங்கள்.
இந்த பேஸ்ட்டை தலையில் பேக் ஆக போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர கூந்தல் கருகருவென்றாகும்.
நீளக்கூந்தல் பிரியையா நீங்கள்? உங்களுக்கே உங்களுக்கான அசத்தல் சிகிச்சை இது. இதற்கு உளுந்து கூட தேவையில்லை. இட்லி, தோசைக்கு ஊறவைத்த உளுத்தம் பருப்பின் தண்ணீரே போதுமானது!
கொட்டை நீக்கிய நெல்லிக்காய் - 2,
செம்பருத்தி இலை - 5
இந்த இரண்டையும் அரைத்து இதனுடன் வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன் சேர்த்து உளுத்தம் பருப்பு ஊறவைத்த தண்ணீரையும் கலந்து கொள்ளுங்கள். இதை தலையில் பேக் ஆக போட்டு உலர்ந்ததும் அலசுங்கள்.
வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்துவர, தலை முடியின் வேர்ப்பகுதிகளில் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் நீளமாக வளரத் தொடங்கும். உளுத்தம் பருப்பு கழுவிய தண்ணீரே நுரைத்து, ஷாம்பு மாதிரி அழுக்கை நீக்குவதால் தனியே ஷாம்பு போட வேண்டிய அவசியமில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு!