Paristamil Navigation Paristamil advert login

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

1 பங்குனி 2017 புதன் 09:32 | பார்வைகள் : 9386


 அரிசி உணவுகள் உடல் எடையை கூட்டும். சர்க்கரை வியாதியை தரும் என்று பலரும் அரிசியை குறை சொல்வார்கள். ஆனால் குற்றவாளி நாம்தான். சாப்பிட்ட உணவிற்கு தகுந்தாற்போல் வேலை செய்யாமல், நாள்முழுவதும் உட்கார்ந்தபடியே இருந்துவிட்டு பழியை அரிசி மீது போட்டுவிடுகிறோம். 

 
இன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் ஒரு கப் அளவுகூடச் சாதம் சாப்பிட மறுக்கின்றனர். இது மிகவும் தவறு. வளரும் பருவத்தினருக்கு அரிசி சாதம் ரொம்பவே முக்கியம்.
 
'மனிதனுக்கு உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களில் பெரும் பங்கு தானிய உணவுக்குத்தான் சேரும். அதில் அரிசியும் ஒன்று. பண்டைய காலத்திலிருந்து அரிசி மற்றும் அதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சமீபகாலமாக இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். இந்த உணவுப் பழக்கம் பல உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
 
அரிசி, நம் உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின் (Riboflavin) உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களைத் தரக்கூடியது. தினமும் அரிசியை 200 முதல் 350 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியில் நார்ச்சத்து என்பது மிகமிகக் குறைவு. எனவே அரிசியின் முக்கால்வாசி அளவுடன் கண்டிப்பாகக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அதில் ஒன்று கீரையாக இருந்தால், மிகச் சிறப்பு. இதுவே ஒரு சமச்சீரான உணவாக இருக்கும்.
 
அரிசி உணவு மட்டுமே உடல் பருமனுக்குக் காரணம் என்பது முற்றிலும் தவறு. இன்றைய அவசர வாழ்க்கையில், பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள் சரியான நேரத்தில் தூங்குவதோ, உண்பதோ கிடையாது. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து, காலை லேட்டாக எழுகிறார்கள். இதனால், காலை உணவை மதிய வேளையில் உண்பதால், மதிய உணவும், இரவுக்கான உணவும் தள்ளிப்போகிறது. 
 
இது முற்றிலும் தவறான பழக்கம். உணவு சரியாகச் செரிமானம் ஆகாது. மேலும், இப்படியான பழக்கம் தொடரும்போது, அரிசி உணவு மட்டுமல்லாமல், எந்த உணவும் உடலைப்பருமனாக்கிவிடும். உடல் ஆரோக்கியத்தைப் பெரும் அளவில் பாதித்துவிடும். எனவே, தகுந்த நேரத்துக்குத் தூங்குதல் மற்றும் உணவு உண்ணுதல் என்பது மிக அவசியம். அரிசியையும் கோதுமையையும் கிட்டத்தட்ட சரிசமமாக உண்ணவேண்டும்.
 
அரிசி உணவை முற்றிலும் தவிர்க்கும்போது பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்கள் நம் உடலுக்குக் கிடைக்காது. ரிபோஃபிளேவின் குறைபாட்டால் வாய்ப்புண், உதடு வெடிப்பு, நாக்குப்புண் போன்ற பாதிப்புகள் வரும். அதிலும், டீன் ஏஜ் பெண்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருவதுடன் உடல் சோர்வு ஏற்படும்' என்கிற கிருஷ்ணமூர்த்தி, எந்த வகையான அரிசி சிறந்தது என்பதையும் சொன்னார்.
 
'உழைப்புக்கு அரிசி உணவுதான் பெஸ்ட். சின்ன வயதிலே அரிசி சாதத்தைக் குறைத்து சாப்பிட்டு வந்தால், நாற்பது வயதுக்கு மேல் உடலில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும். புழுங்கல் அரிசியை வீட்டில் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, கேரளா அரிசி போன்றவை அரிசி வகைகளில் மிகவும் சிறந்தவை. இவற்றின் சுவை சற்றுக் குறைவாக இருந்தாலும் மற்ற அரிசி வகைகளைவிட உடலுக்கு நல்லது. பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்ப்பது நல்லது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்