நூறுக்குப் பதில் ஐநூறு
21 மாசி 2022 திங்கள் 09:43 | பார்வைகள் : 12954
க்ணிங் க்ணிங். .. அரண்மனையிலிருந்த ஆராச்சி மணி ஒலிச்சது. சேவகன் ஒருவன் வெளியே வந்தான். அரண்மனை வாசல்லெ ஒருத்தர் நிண்ணுட்டிருந்தார்.
"என்ன பெரியவரே... என்ன வேண்டும்'' அந்தச் சேகவன் கேட்டான்.
"நம் அரசரைப் பார்க்க வேண்டும். என் மகளின் திருமணத்திற்கு அரசரிடம் உதவி கேட்க வேண்டும்" அப்படீண்ணாரு அந்தப் பெரியவர்.
"ஓஹோ அப்படியா நல்லது. நான் அரசரிடம் தகவலைத் தெரிவித்து அனுமதி வாங்கி வருகிறேன்" ணுட்டு அந்தச் சேகவன் அரண்மனைக்குள்ள போனான். அரச சபைக்குள் நுழைஞ்சான். அங்க அரசர் பெருவழுதி சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்.
அவருடய ரெண்டு பக்கம் மந்திரிகளும் படைத்தளபதிகளும் உக்காந்திருந்தாங்க. அரசர் முன் தலை தாழ்த்தி தன்னோட வணக்கத்தைத் தெரிவிச்ச சேவகன், "ஒரு பெரியவர் உங்களிடம் உதவி கேட்டு வாசலில் நிற்கிறார்" என்றான்.
"வரச்சொல்" என்றார் அரசர்.
" உத்தரவு அரசே...'' மீண்டும் அரசர் முன் தலை வணங்கினான் சேவகன்.
சிறிது நேரத்தில் பெரியவர் அரச சபைக்குள் நுழைந்தார்.
அரசர் பெரு வழுதி முன் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி தன் வணங்கங்களைத் தெரிவித்தார் அந்தப் பெரியவர்.
"என்ன பெரியவரே... யாம் என்ன உதவி செய்ய வேண்டும்? '' அரசர் கேட்டார்.
" கருணையே உருவான திருவரசே... என் புதல்வியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் சீரும் சிறப்பாக நடந்தேற அடியேனுக்கு உதவவேண்டும்''
"திருமணத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன?''
"ஏறக்குறைய இரு திங்கள்கள் இருக்கின்றன'' பெரியவர் பதில் கூறினார்.
"நல்லது. இது அறுவடைக்காலம். அறுவடை முடிந்ததும் வாருங்கள். நூறு பொற்காசுகள் தருகிறேன்'' என்றார் அரசர்.
பெரியவர் முகம் அன்று மலர்ந்த தாமரை போல் மலர்ந்தது. அவர் அரசரை வணங்கி மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்.
ஒரு மாதம் முடிந்தது.
பெரியவர் மீண்டும் அரண்மனைக்கு வந்தார். அரசருக்கு ஆயிரம் வேலையல்லவா? அரசரால் பெரியவரை அடையாளம் காண முடியவில்லை.
"என்ன பெரியவரே... என்ன வேண்டும்?'' என்று அரசர் கேட்டதும் பெரியவரின் முகம் வாடியது.
"அரசே... தாங்கள் என் மகளின் திருமணத்திற்கு உதவுவதாக வாக்களித்திருந்தீர்கள். அதைப் பெற்றுச் செல்லலாம் என்று வந்தேன்'' என்றார் பெரியவர்.
அரசருக்குத் தாம் நூறு பொற்காசுகள் தருவதாக வாக்களித்தது நினைவுக்கு வந்தது. இருப்பினும் பெரியவரின் நேர்மையைப் பரிசோதிக்க விரும்பினார்.
"ஆமாம்... ஆமாம்... நினைவிருக்கிறது. யாம் என்ன உதவி செய்வதாகச் சொல்லியிருந்தோம்?'' என்று கேட்டார்.
"இரு நூறு பொற்காசுகள் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள்'' முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சொன்னார் பெரியவர்.
"என்ன இருநூறு பொற்காசுகளா...?''
"இல்லையில்லை. முன்னூறு பொற்காசுகள் தருவதாக வாக்களித்திருந்தீர்கள்?''
"பெரியவரே.. நன்றாக நினைவுகூர்ந்து பதில் சொல்லுங்கள்'' அரசரின் முகத்தில் கோபம் தெரிந்தது.
"ஐயோ.. என்னை மன்னித்து விடுங்கள் அரசே... தாங்கள் நானூறு பொற்காசுகள் தருவதாக வாக்களித்திருந்தீர்கள்? '' என்றார் அந்தப் பெரியவர்.
அதைக் கேட்ட அரசரின் உடல் கோபத்தால் நடுங்கியது. கண்கள் சினத்தால் கோவைப்பழம் போல் சிவந்தன.
"யாரங்கே... இந்தப் பெரியவரைத் தூணில் கட்டி நூறு கசையடி கொடுங்கள். பொய் சொன்னதற்கு அதுதான் தண்டனை...'' என்று உத்தரவிட்டார் அரசர்.
பாய்ந்து வந்த காவலாளிகளைப் பார்த்த அந்த பெரியவர் அதிர்ச்சியடையவில்லை. மாறாக புன்னகை புரிந்தார்.
பெரியவரின் புன்னகையைக் கவனித்த அரசர் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்.
"என்ன பெரியவரே பொய் சொல்லி ஏமாற்ற நினைத்த உமக்கு இந்தத் தண்டனை போதாதா?'' அரசர் ஏளனத்தோடு கேட்டார்.
"வேந்தர் வேந்தே... உம்மிடம் நான் பொய் செல்வேனா... நான் சொன்னது அனைத்தும் உண்மை'' பெரியவர் அமைதியாகச் சொன்னார்.
"அதெப்படி... நான் தருவதாகச் சொன்னது நூறு பொற்காசுகள்தாமே! நீரோ இருநூறு, முன்னூறு, நானூறு என ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைச் சொல்லி விட்டு பொய்யே சொல்லவில்லை என்கிறீரே...'' அரசரின் கோபம் தணியவில்லை.
"மன்னா... நூறு பொற்காசுகள் தருவதாகச் சொன்னது உண்மை. ஆனால் ஒரு திங்கள் காத்திரு என்றீர்கள். அதையே நான் " இரு... நூறு பொற்காசுகள்'' என்றேன்.
"அப்படியானால் முன்னூறு என்றீரே...''
" ஆமாம். சற்று முன் நூறு பொற்காசுகள் தருவதாகச் சொன்னீர்கள். அதுதான் முன் நூறு என்று குறிப்பிட்டேன்''
''அப்படியானால் நானூறு பொற்காசுகள் என்றது...'' அரசர் ஐயத்தோடு மெல்லப் பேசினார். அவருடைய முகத்தில் கோபம் மறைந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தலைகாட்டத் தொடங்கியிருந்தது.
"நான் நூறு'' பொற்காசுகள் தருகிறேன் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்...''
பெரியவர் கூறி முடிக்கவும் சபையோர் கரவொலிஎழுப்பவும் சரியாக இருந்தது.
பெரியவரின் தமிழறிவு கண்டு உள்ளம் மகிழ்ந்த அரசர் பெருவழுதி அவருக்கு ஐநூறு பொற்காசுகள் பரிசாக அளித்தார். பெரியவரும் மன்னரை மனமார வாழ்த்தி விடைபெற்றார்.