Paristamil Navigation Paristamil advert login

பெட்டிக்காரப் பெரியசாமி

பெட்டிக்காரப் பெரியசாமி

18 மார்கழி 2021 சனி 07:22 | பார்வைகள் : 11123


டிசம்பார் மாதம் வந்துவிட்டாலே போதும் கடைக்காரர்களுக்கு பெட்டிக்காரப் பெரியசாமியின் ஞாபகம் வரும். காரணம் என்ன தெரியுமா?

 
டிசம்பர் மாதம் பண்டிகைகளின் மாதம். கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு... அப்படீங்கற ரெண்டு முக்கிய பண்டிகைககள் ஒரு வாரத்திற்குள் வருகின்றன..
 
அதுக்கும் பெட்டிக்காரப் பெரியசாமிக்கும் என்ன தொடர்பு அப்படீண்ணு நினைக்கிறீங்களா?
 
நாம விரும்பரவங்களுக்கு நேசிக்கறங்களுக்கு ஒவ்வொருவரும் பரிசுப் பொருட்களை அன்பளிப்பா கொடுக்கிற ரண்டு முக்கிய நாட்களாச்சே ....
 
அன்பளிப்புகளை அப்படியே கொடுக்க முடியாதில்லயா? அப்பொருட்களை அதுக்கேத்த மாதிரி பெட்டியில வைச்சு, வண்ணத் தாளில் பொதிஞ்சு, தங்க நிற நூலால் அலங்காரமாகக் கட்டிக் கொடுக்கும் போதுதான் அன்பளிப்புகளுக்கு ஒரு மதிப்பு வரும். இல்லையா
 
பரிசுப் பொருட்களை வச்சுக் கொடுப்பதற்கான பெட்டிகள் செய்யறதுதான் பெரியசாமியின் வேலை. அதனால் அவரை "பெட்டிக்காரப் பெரியசாமி'' அப்படீண்ணு கூப்பிடுவாங்க.
 
கெட்டி அட்டைகளை வாங்கி வேறுவேறு அளவுகளில் அவற்றை வெட்டி மடக்கி பெட்டி செஞ்சு அதுக்கு மேல வண்ணத்தாள் ஒட்டி தங்க நிற நூலால் கட்டி...
 
பெரியசாமி பெட்டி செய்யறதைப் பார்த்துக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது.
 
பெட்டிக்கார பெரியசாமி ரொம்ப ஏழை. வருஷத்தில் எப்போதாவதுதான் பெட்டி செய்யற வாய்ப்பு கிடைக்கும். அப்போ கிடைக்கும் வருமானத்தை வச்சுதான் வருஷம்பூரா வாழணும். பெரியசாமி ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அன்பு மனைவி பண்பழகியும் அழகு மகள் ஓவியாவும் பட்டினியிலும் பாசத்தோடும் நேசத்தோடும் வாழ்ந்தார்கள்.
 
பெரியசாமி உருவாக்கும் பெட்டிகள் எத்தனை பேருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன தெரியுமா? தன் மகள் ஓவியாவுக்கு என்னால் ஒரு அன்பளிப்பு கொடுக்க முடியவில்லையே அப்படீங்ற வருத்தம் பெரியசாமியோட மனசோட ஒரு மூலையில நிரந்தரமாக இருக்குது.
ஜொலிக்கும் வண்ணக் காகிதங்களை சுளிவு நெளிவில்லாமல் பெட்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அப்பாவை வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கிட்டயிருந்தாள் ஓவியா. "இந்தப் பெட்டியையும் சேர்த்தால் இருபத்தைந்து பெட்டிகளாயிரும். கடைவீதிக்குப் போயி கடைக்காரரிடம் கொடுத்துட்டு வரலாமே..''  பண்பழகி கேட்டாள். அவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. மூவரும் சேர்ந்து பெட்டிகளை பெரிய துணிப் பைக்குள் அலுங்காமல் குலுங்காமல் வச்சாங்க..
 
மீதி கெட்டி அட்டைக எத்தனை இருக்குதுண்ணு எண்ணிப் பார்த்தார் பெரியசாமி. "ரொம்ப கவனமாக, அட்டைகளை வீணாக்காமல் செஞ்சா இன்னுமொரு இருபத்தைந்து பெட்டிகள் செய்யலாம்'' அவர் தனக்குத்தானே பேசிக்கிட்டாலும் அவர் பேசினது எல்லோருக்கும் கேட்டது.
 
பெட்டிகள் வச்ச துணிப்பையை தலையில் சொமந்தபடி கடைவீதியை நோக்கி நடக்கத் தொடங்கினாரு பெரியசாமி. பெட்டிகளை வித்தாரு. கிடைச்ச பணத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினாரு அழகு மகள் ஓவியாவுக்குத் தின்பண்டம் வாங்க பெரியசாமி மறக்கல.
 
பொருட்களோடு வீட்டுக்குள் நுழைஞ்ச பெரியசாமி வீடு கிடந்த கோலத்தை பாத்து அதிர்ந்து நின்ணாரு. கெட்டி அட்டைகள் அங்கங்கு வெட்டப்பட்டு கெடக்குது. தங்க நிற நூலோ சிக்குபட்டுக் கிடக்குது. வண்ணத் தாள்கள் கசங்கிப் போய்க் கிடக்குது..
 
கிடைச்ச பணத்திற்குப் பொருட்கள் வாங்கியாச்சு. வேறொரு கடைக்காரருக்கு இருப்பத்தைந்து பெட்டிகள் தர்றதாகச் சொல்யிருக்கேனே.. இந்த நிலமையில் என்னால் இருபது பெட்டிகள் கூட செய்ய முடியாதே.. கெட்டி அட்டைகள் வாங்கப் பணமும் இல்லை. நான் என்ன செய்வேன்... ''
 
யோசிக்க யோசிக்க பெரியசாமிக்கு கோபம் வந்தது. கோபம் தலைக்கு ஏறிச்சு கண்கள் சிவந்துச்சு. கோபத்தால் அவரோட உடல் நடுங்கிச்சு. கையிலுள்ள பொருட்களை அப்படியே கீழே போட்டு "ஏய் பண்பு.. உன்னை யார் பெட்டி செய்யச் சொன்னது? நான்கு பெட்டி செய்யறதுக்குத் தேவையான அட்டைகளை வச்சு ஒரு பெட்டி செஞ்சிருக்கே.. அறிவிருக்குதா உனக்கு? '' அப்படீண்ணு கத்தினாரு." ஐயோ.. நான் அட்டைகளைத் தொட்டுக்கூடப் பாக்கல. இது ஓவியாவோட வேலையாக இருக்கும். பாவம் பொண்ணு தெரியாமச் செஞ்சிருப்பாள். அவளை அடிக்காதீங்க''  பண்பழகி கெஞ்சினாள்.
 
வீட்டுக்கு கொஞ்சம் அப்பாலெ தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்த ஓவியா அப்பாவோட குரல் கேட்டு விளையாட்டை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
 
"வாடீ... இங்கே.. பெட்டி செய்ய உன்கிட்ட யார் சொன்னது. உனக்கு விளையாட என்னோட அட்டைகள் தான் கிடைச்சுதா? நான்கு பெட்டிக்குத் தேவையான பொருட்கள் வீணாய்ப் போச்சே... இந்த அட்டைகளை வைச்சு நீ என்ன செஞ்சே''  ஓவியாவின் கைகளை முறுக்கிப் பிடிச்சிட்டு கேட்டார் பெரியசாமி. ஓவியாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவள் கண்களிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஒழுகிச்சு..
 
"' என்னடி... நான் கேட்கறது காதில விழல? அட்டைகளை வைச்சு நீ என்ன செஞ்சே? '' அவளை அடிக்கறதக்காக கைகளை தூக்கியபடி உரக்கக் கூவினாரு.
 
"உங்களுக்குப் பரிசு தர்றதுக்கா ஒரு பெட்டி செஞ்சேன்பா...? ''  அவள் மெதுவாகச் சொன்னாள்.
 
மகள் சொன்னதைக் கேட்டதும் பெரியசாமியோட கோபம் கொஞ்சம் தணிஞ்சுது.. அவரோட பிடி தளர்ந்திச்சு.
 
ஓவியா ஓடிப்போய் அவசெஞ்சு வச்ச பெட்டியை எடுத்துட்டு வந்தாள். அப்பாகிட்ட நீட்டினாள்..
 
இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பெரியசாமி மகள் தனக்காகச் செய்த பெட்டியை வாங்கினார். "சத்தியமாக எனக்காகத் தான் இந்தப் பெட்டி செஞ்சியா? " பெட்டியில கட்டியிருந்த நூலை அவிழ்த்துக்கிட்டே கேட்டார்.
 
கோபமா கேட்கணும்ணு நினைச்சும் அவரோட கொரல அன்பு கலந்ததை அவரால் தடுக்க முடியல.
 
ஆசையா பெட்டியைத் திறந்து பார்த்த பெரியசாமி பெட்டி காலியாக இருக்கறதைப் பாத்து ஆச்சரியப்பட்டார். "ஏம்மா... யாராவது காலிப்பெட்டியை அன்பளிப்பாகக் கொடுப்பாங்களா? பெட்டிக்குள்ளே ஏதாச்சும் வாச்சு கொடுக்க வேண்டாமா ''
 
"இந்தப் பெட்டி காலியாய் இருக்குண்ணு யார் சொன்னாங்க? அதுக்குள்ளே நான் .ஆயிரம் முத்தங்கள் வச்சிருக்கேன்..''  அப்படீண்ணா ஓவியா.
 
மகள் சொன்னதைக் கேட்ட பெரியசாமி ஓவியாவை அப்படியே வாரி எடுத்துகிட்டாரு. நெஞ்சோடு சேத்து அணைச்சுக்கிட்டாரு. அவளோடு கன்னத்திலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டாரு. "எனக்குக் கிடைச்ச முதற்பரிசே ரொம்ப விலைகூடின பரிசா தந்தேட்டம்மா .. வாழ்நாள் பூரா இப்பரிசை என் ஊயிரைவிட மேலாக நான் பாதுகாப்பேன்" அப்படீண்ணு சொல்லிட்டு ஓவியாவை பின்னயும் முத்தமிட்டாரு.
 
இக்காட்சியைப் பார்த்துக்கிட்டிருந்த பண்பழகியோட கடைக்கண்ணிலிருந்து  நீர் வழிஞ்சுது.. புடவைத் தலைப்பால் தன்னோட கண்களைத் துடைத்துக்கிட்டே சமையலறைக்குள் நுழைஞ்சா பெரியசாமியோட அன்பு மனைவி பண்பழகி. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்