Paristamil Navigation Paristamil advert login

பறக்கும் நட்சத்திரம்...!!

பறக்கும் நட்சத்திரம்...!!

11 மார்கழி 2021 சனி 10:51 | பார்வைகள் : 10964


அது ஒரு பயந்தாங்கொள்ளி... சூரியன் மேற்கே மறையத் தொடங்கிவிட்டால் போதும் அதோட மனசுல பயம் வந்து ஒட்டிக்கும். இருட்டுணு சொன்னா பகலிலேயே பயந்து அழுவிடும். எப்போதும் யாருக்கும் தெரியாமல்... யார் கண்ணிலயும் படாமல்... மரத்துக்குப் பின்னாலயோ இலைக்கு அடியிலயோ மறஞ்சிருக்கும்.

 
பாட்டியோட... பாட்டியோட... பாட்டியோட... என்று பன்னிரண்டு முறை சொல்லுங்க. அந்தப் பன்னிரண்டாவது பாட்டி வாழ்ந்த ஒரு காலம் இருக்கும் இல்லையா. அந்தக் காலத்தில் இருந்த மின்மினிப் பூச்சிக எதுவும் மின்னாது. சாதாரண பூச்சிகளப் போலத்தான் இருக்கும். அதில் ஒரு பூச்சிதான் இந்த பயந்தாங்கொள்ளி மின்மினிப் பூச்சி. அதன் பெயர் பொன்னி. இந்தப் பொன்னிதான் பிற பூச்சிகளுக்கெல்லாம் விளக்கு வரக் காரணமாக இருந்த பூச்சி. குட்டிக் குட்டிப் பறக்கும் நட்சத்திரங்களப் போல மின்மினிப் பூச்சிகள் மார்றதுக்கு இந்தப் பொன்னிதான் காரணம். அது எப்படி? அதுதான் இந்தக் கதை
 
பொன்னி.... ரொம்ப சிறிசா இருக்கும். யார்கிட்டயும் சிரிச்சுப் பேசாது. ஒதுங்கியேயிருக்கும். ஈயோ கொசுவோ பறந்து வர்றதைப் பார்த்தாலே போதும் அவங்களுக்கு வழியை விட்டுட்டு இது ஒதுங்கி நிக்கும்.
 
" பார் பார் பொன்னியைப் பார். பயந்தாங்கொள்ளி பொன்னியைப் பார்" ணு வேற பூச்சிகெல்லாம் இதை கேலிசெய்யும். அதைக் கேட்டுட்டு பொன்னி பேசாம இருக்கும். விளையாடக் கூப்பிட்டாலும் போகாமல் வீட்டிலேயே இருக்கும்.
எத்தனை நேரம் தான் வேடிக்கை பாக்கறது! பொன்னி மெல்ல மெல்ல பகல் நேரத்திலேயே தூங்கப் பழகிருச்சு. பகல்ல தூங்கறதாலே ராத்திரலெ தூக்கம் வராம தவிச்சது. வெளியே போகவும் முடியாது. ராத்திரியிலெ வெளியே போனா பாவம் அது பயந்தே செத்திடும். அது ராத்திரிலெ கொட்டக் கொட்ட விழிச்சுகிட்டே என்ன செஞ்சுது தெரியுமா? வானத்திலெ மின்னற நட்சத்திரங்களைப் பாக்கத் தொடங்கிச்சு.
 
நட்சத்திரங்களையே பாத்துக்கிட்டிருந்தால் வேறு எந்தப் பக்கமும் பாக்க வேண்டாமே... மின்ற இந்த நட்சத்திரங்களுக்காத்தான் எத்தனை அழகு. குட்டி குட்டி விளக்குகள் மாதிரி. அதிலொரு விளக்கு எனக்குக் கிடைச்சா எப்படி இருக்கும்? ராத்திரிலெ யாருக்கும் பயப்படாமல் பறந்து திரியலாம். ஒவ்வொரு நாளும் பொன்னி இப்படி நினைக்கும். நட்சத்திரங்களையே பாக்கும்.
 
பல நாட்கள் நட்சத்திரங்களை பாத்துப் பழகிய பொன்னி மெல்ல மெல்ல ஒரேயொரு ஒரு நட்சத்திரத்தை மட்டும் உத்துப் பாக்கத் தொடங்கிச்சு.
 
அப்படிப் பாத்திட்டிருந்த பொன்னி ஒரு அதிசயத்தைக் கண்டுபுடிச்சுது. பொன்னி கண்ணடிச்சா அந்த நட்சத்திரமும் கண்ணடிக்குது. அட பரவாயில்லையே இந்த விளையாட்டு அப்படீண்ணு நெனச்ச பொன்னி ரெண்டு மூணு தடவை ஒண்ணா கண்ணடிக்கும். அப்ப அந்த நட்சத்திரமும் அதுபோல வேகவேகமாக கண்ணடிக்கும்.
 
பொன்னி சிரிச்சா அதுவும் சிரிக்கும். அப்படி நாட்கணக்காப் பாத்துப் பாத்து ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக மாறிட்டாங்க.
 
ஒரு நாள் ராத்திரி...
 
"பொன்னி.. பொன்னிணு...''  யாரோ கூப்பிடற சத்தம்கேட்டு பொன்னி பயந்து போச்சு. சுற்றும் முற்றும் பார்த்திச்சு.
 
"அங்கும் இங்கும் பாக்காதே! மேலே பார்... நான்தான் உன் நட்சத்திர நண்பன் கூப்படறேன்" அப்படீங்கற சத்தம் கேட்டுச்சு.
 
பொன்னி மேலே பாத்திச்சு. "நீயா... என்னை கூப்பிட்டே" அப்படீண்ணு கேட்டிச்சு. ''பொன்னியாலே நட்சத்திரம் பேசறத நம்பவே முடியல. தன்னோட சின்ன இமைகளைப் பட படவென அடிச்சுது.
 
" ஆம்.. நான் தான்.. நீ என் வீட்டுக்கு வாராயா? " ணு நட்சத்திரம் கூப்பிட்டுச்சு..
 
"ஐயோ இருட்டுணாலெ நான் பயந்து செத்துருவேன, பகல்லயோ உன்னைப் பாக்கவும் முடியாதே.." என்ன பண்ணலாம்ணு பொன்னி வருத்தத்தோடு சொல்லிச்சு.
 
"எதுக்கு பயப்படற.. பயப்படாதே .. என்னையே பாத்துகிட்டே பறந்து வா.. வேற எங்கயும் பாக்காதே உனக்காக நான் காத்திட்டிருக்கிறேன்ணு சொல்லிச்சு அந்தக் குட்டி நட்சத்திரம்.
 
நட்சத்திர நண்பனோட வீட்டுக்குப் போறதுக்கு பொன்னிக்கும் ஆசைதான்... ஆனால் இருட்டைப் பாத்தா பயமாகவும் இருக்குதே. என்ன பண்றது. அப்படீண்ணு யோசிச்சது. பல நாள் யோசிச்சது. நட்சத்திர நண்பனைப் பாக்கணுங்கற ஆசைவேற வளந்துகிட்டே இருந்திச்சு.
 
ஒரு நாள் ராத்திரி பொன்னி மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்திச்சு பாக்கறபக்கமெல்லாம் கும்மிருட்டு... பொன்னியோட உடம்பு நடுங்கிச்சு.. அது தன்னோட கண்களை இறுக மூடிக்கிச்சு. வெளியே குதிச்சு பறக்கத் தொடங்கிச்சு..
 
தன்னோட சின்னச் சின்ன சிறகுகளை படபடவென அடிச்சுகிட்டுப் பறக்கத் தொடங்கிச்சு. கண்களைத் திறக்காம பறந்துச்சு நிக்காம பறந்திச்சு.
 
பொன்னி சின்னப் பூச்சிதானே அதோட றெக்ககைகளும் சின்னதுதானே ? அதோட றெக்கைகளுக்கும் எவ்வளவு பலமிருக்கும். பாவம் அதால கொஞ்ச தூரம் கூட பறக்கமுடியல. அதுக்குள்ள பொன்னியோட உடம்பு வலிக்கத் தொடங்கிச்சு.றெக்கைகள் தளந்து போச்சு படபடண்ணு அடிச்சது இப்ப பட... பட...ண்ணு அடிக்கத் தொடங்கிச்சு பொன்னிக்கு ஒரே களைப்பா இருந்திச்சு. அதுக்கு மயக்கம் வந்திச்சு. கண்ண தெறக்க முடியாமப் போச்சு. தலை சுத்தற மாதிரி இருந்திச்சு.
 
"கடவுளே என்னாலெ என் நட்சத்திர நண்பனப் பாக்க முடியாதே" அப்படீண்ணு. நெனச்சுது. அதுக்கு அழுகை அழுகையா வந்திச்சு. இப்ப அது முழுசா மயங்கிப் போச்சு. அதால றெக்கைககள ஆசைக்கவெ முடியலே அது அப்படியே கீழே கீழே விழத்தொடங்கிச்சு. கொஞ்ச நேரமானதும் பொன்னி கண் முழிச்சது. "ஐயோ... நான் கீழே விழுந்திட்டிருக்கேனே" அப்படீண்ணு
நெனச்சு மறுபடியும் றெக்கைகள பலமாக அடிக்கும். ஆனா கொஞ்ச உயரம் பறந்ததும் களைப்பு வந்துரும். மயக்கமும் வந்துரும். மறுபடியும் கீழ விழத் தொடங்கும்.
 
இப்படி பலதடவ நடந்திச்சு. பொன்னி படற கஷ்டத்த அந்த நட்சத்திர நண்பன் பாத்துக்கிட்டேயிருந்தான்.
 
பொன்னியோட நிலைமையை நினைச்சு ஒரு பக்கம் வருத்தம் வந்தது. வீட்டுக்குக் கூப்பிட்டது தப்பாபோச்சோண்ணு நெனச்சது. அதே நேரத்தில் பொன்னியோட விடாமுயற்சியை நினைச்சப்போ சந்தோஷமாவும் இருந்திச்சு.
 
"பாவம் பொன்னி இன்னும் அதைப் பறக்க விடக் கூடாது. என்னோட நெருங்கிய நண்பனாச்சேணு''  என நட்சத்திரம் நினைச்சது. அது மெல்ல கீழே இறங்கி வந்திச்சு பொன்னியை நோக்கி வந்திச்சு.
 
மின்னும் வண்ணக் கையால் கீழே போகும் மின்னுவைத் தாங்கிப் பிடிச்சது. அப்படி பிடிச்சப்போ நட்சத்திரத்தோடு ஒரு சின்னப் பகுதி பொன்னியோட ஒடம்பிலெ ஓட்டிகிச்சு. "பொன்னி... பொன்னி.. கண்ணைத் தெற... நான் தான் உன் நட்சத்திர நண்பன் கூப்பிடுகிறேன்''  அப்படீண்ணு மெல்லிய குரலில் கூப்பிட்டுச்சு.
 
பொன்னி மெல்லக் கண்ணைத் திறந்து பாத்திச்சு.. "அட இது நான் தானா...? என் உடம்பெல்லாம் ஒரே வெளிச்சமாக இருக்கிறதே... "ணு ஆச்சரியப்பட்டது.
 
நட்சத்திர நண்பனைத் தேடிச்சு ஆனா அந்த நட்சத்திர நண்பனக் பாக்கமுடியல. அப்புறம் என்ன? ஒடம்போட வௌக்கு இருந்தா எதுக்குப் பயப்படணும் இப்பெல்லாம் பொன்னி ராத்திரி யாருக்கும் பயப்படாம சந்தோஷமாப் பறக்கும்.
 
பொன்னி பறக்கறதப் பாத்தா ஒரு குட்டி நட்சத்திரம் பறக்கற மாதிரி இருக்கும். இருக்காத பின்னெ... அந்த வெளிச்சம் நட்சத்திரம் தந்ததாச்சே.
நீங்க எப்பவாச்சும் மின்மினிப் பூச்சிகள பாத்திருக்கிங்களா... வாய்ப்புக் கெடச்சா பாருங்க. அது நட்சத்திரம் மாதிரி மின்னிகிட்டே பறக்கறதப் பாத்துக்கிட்டே இருக்கலாம் போலத் தோணும்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்