பிரான்சில் "humain perdu" (மனிதம் தொலைந்தது) La SPA.
6 புரட்டாசி 2023 புதன் 14:53 | பார்வைகள் : 7148
La SPA என்பது கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளின், அனாதையான வளர்ப்பு பிராணிகளின் தாய்வீடு, அல்லது தாய்மடி என கருதலாம்.
இந்த தொண்டு நிறுவனம் கண்ணீருடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக் காலத்தில் வளர்ப்பு செல்லப் பிராணிகள் கைவிடப்படுவது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக் காலத்தில் வளர்ப்பு பிராணிகள் கைவிடப்படுவது அதிகரித்து வருகிறது, இவ்வாண்டு (2023) சுமார் 17 000 (16498) வளர்ப்பு பிராணிகள் கைவிடப்பட்ட நிலையில் தாங்கள் கண்டு பிடித்து பராமரித்து வருவதாக La SPA தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், 11,564 பூனைகள், 4,054 நாய்கள், 884 புதிய செல்லப்பிராணிகள் மற்றும் பாழடைந்த பகுதிகளில் 36 கைவிடப்பட்ட குதிரைகள் என்பன தாம் சேகரித்து உள்ளதாக Lz SPA தெரிவித்துள்ளது.
La SPA அமைப்பின் தலைவர் Jacques-Charles Fombonne தெரிவிக்கையில்; 'கைவிடப்படும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 2.4% சதவீதத்தால் அதிகரித்து உள்ளது. அதேவேளை அவைகளை தத்தெடுக்கும் வீதம் 5.2% சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்ததுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் வரப்போகும் கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை பராமரிக்க எங்களிடம் இடவசதிகள் இல்லை இது ஒரு மோசமான நிலை ' என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் La SPA "மனிதம் தொலைந்தது" (humain perdu) என்னும் தலைப்பில் புதிய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பிரச்சாரம் வளர்ப்பு பிராணிகளை கைவிடுவோரை கண்டிக்கும் அதேவேளை தத்தெடுக்க வருவோரை ஊக்கப்படுத்தும் என நம்புகின்றது.