தூங்குமூஞ்சி வாத்தியார்
28 மார்கழி 2022 புதன் 12:34 | பார்வைகள் : 8357
ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம்.
மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.
அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார்.
இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள்.
வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார்.
மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள்.
வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.