Paristamil Navigation Paristamil advert login

யார் பெரியவர்?

யார் பெரியவர்?

22 மார்கழி 2022 வியாழன் 13:10 | பார்வைகள் : 8447


ஒண்ணாவது படிக்கும் யாழினிக்கு ஒரே வருத்தம். தம்பி பிறந்த பிறகு அப்பாவும், அம்மாவும் அவனைதான் கவனிக்கறாங்க. தன்னை மறந்துவிட்டாங்களோன்னு ஒரே கவலை.

 
தம்பி பிறந்தது யாழினிக்கு சந்தோஷமாக தான் இருந்தது. இனிமேல் தனியா விளையாட வேணாம். கூட தம்பி இருக்கான்னு தோன்றியது. அவன் அம்மா வயத்துல இருக்கும் போது, ‘தம்பி பாப்பாதான் வேணும்’ என்று அவள் அடிக்கடி சொல்லுவா. ஆனால், அவன் பிறந்த பிறகு, அப்பாவும் அம்மாவும் இப்படி செய்வாங்கன்னு அவள் நினைக்கவே இல்லை.
 
முன்னல்லாம் அப்பாவும், அம்மாவும் தன்னைதான் பார்ப்பாங்க. அப்பா கூட அடிக்கடி கிண்டல் பண்ணுவார். நானும் குழந்தையா மாறினாதான் அம்மா என்னையும் கவனிப்பாங்கன்னு சொல்லுவார். ஆனா, இப்ப எல்லாம் மாறிடுச்சு. தம்பியதான் பாத்துக்கறாங்க.
 
அம்மா இப்ப ரொம்ப மாறிட்டாங்க. இப்பல்லாம் சாதம் ஊட்டறதில்லை. தட்டுல சாதம் வச்சிட்டு சாப்பிட சொல்லிட்டு தம்பி பாப்பாவ தூக்கி வச்சிக்கறாங்க. ‘நான் அப்படியா பெரிய குழந்தையாயிட்டேன்’னு நினைச்சா யாழினி. ஒருநாள் சாப்பிடலேன்னு அடம் பிடிச்சப்போ அடிக்கவும் செஞ்சாங்க. இப்பல்லாம் அவங்கள பார்க்கவே கோவம் வருது. தம்பிய பார்த்தா எரிச்சலா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல. அப்பாவும் அப்படிதான். முன்னயெல்லாம் வீட்டுக்கு வந்ததும் முதல்ல தன்னை கொஞ்சிட்டுதான் அப்புறம் கால் அலம்பவே போவார். இப்ப தம்பியதான் அதிகமா கொஞ்சறார். யாழினி அடம் பிடிச்சா மட்டும்தான் அவளை கவனிக்கறார். இதுல அடிக்கடி, ‘தம்பி பாப்பாவ நீதான் பாத்துக்கணும்’னு உபதேசம் வேற.
 
 
’திரும்ப எல்லோரும் என்னை கொஞ்சணும்’னு யாழினி நெனைச்சா. ஆனா என்ன பண்ணா கொஞ்சுவாங்கன்னு தெரியல. ஏதாவது பண்ணா, அம்மா அடிச்சிருவாங்கன்னு பயம் வேற. ஆங், அப்பாகிட்ட கேப்போம். அவர்தான் அடிச்சதே இல்லை. இப்பவும் அவர் ‘கண்ணு... செல்லம்...’ அப்படின்னு கொஞ்சுவார். இன்னிக்கு அவர் வந்ததும் கேட்கணும்னு முடிவு பண்ணினா யாழினி.
 
ராத்திரி வந்துச்சு. அப்பா வழக்கம் போல வந்துட்டு, தம்பி பாப்பாவ கொஞ்சினார். அப்புறம் பாத்ரூம் போயிட்டு வந்தார். அம்மா தம்பி பாப்பாவ ஹால்ல விட்டுட்டு சமையல் செய்துட்டு இருந்தாங்க. யாழினி பெட்ரூம்ல உட்கார்ந்தா. அப்பா டிரஸ் மாத்த வந்தார்.
 
“அப்பா... நான் ஒண்ணு கேட்பேன். அடிக்க மாட்டியே’ன்னு சொன்னா. “சீச்சீ... என் செல்லத்த அடிப்பேனா... நீ சொல்லுடா” என்றார்.
 
“முன்ன போல என்னை நீயும், அம்மாவும் என்னை கவனிக்கறதில்லயே? ஏன்?” அப்படின்னு கேட்டா. அப்பா இப்போ யாழினிய நல்லா பார்த்தார். அவளை புரிஞ்சுகிட்ட மாதிரி இருந்துச்சு. கலகலன்னு சிரிச்சார்.
 
“என்ன சிரிக்கற பா” ன்னு யாழினி கேட்டா.
 
“சிங்கம் பெருசா... யானை பெருசா...” அப்படின்னு கேட்டார்.
 
“யானைதான் பெருசு”ன்னு சொன்னா.
 
“ஏன் அப்படி சொல்றே”ன்னு அப்பா கேட்டார்.
 
“யானைதான பெருசா இருக்கு. எல்லோரும் அததானே பாப்பாங்க”
 
“அப்ப காட்டுக்கு ராஜா யானைதானே”ன்னார் அப்பா.
 
“அதெப்படி. சிங்கம்தான் ராஜா. அதுதான பலசாலி”ன்னு யாழினி பதில் சொன்னா.
 
“ஏன்... யானைக்கு பலம் இல்லையா?”ன்னு கேட்டார்.
 
“இருக்கு. ஆனா சிங்கத்துக்கு மூளையும் இருக்கு. எந்த நேரத்துல யாரை அடிக்கலாம்னு அதுக்குதான் தெரியும். டிஸ்கவரி சேனல்ல பாத்துருக்கோமே” அப்படின்னு சொன்னா.
 
“அப்போ எல்லோரும் யானையதான் பார்க்கறாங்க. சிங்கத்தை பார்க்கறதில்லையே?”
 
“சிங்கம் ராஜாவாச்சே. அதுனால பயமா இருக்கும்”
 
“சரி சிங்கத்துக்கு கீழ யானையும் இருக்கா”
 
“இருக்கு பா. அதுதான ராஜா. யானைக்கும் அதுதான் ராஜா”
 
“அப்போ நீ நம்ம வீட்டுல சிங்கமா...? யானையா...?”
 
“சிங்கமாவே இருக்கறேன் பா. தம்பி யானையா இருக்கட்டும்” என்று சொன்னாள் யாழினி.
 
சொல்லிவிட்டு ஹாலுக்கு ஓடினாள். அம்மா கையில தம்பி இருந்தான். யாழினி அவனை மெதுவா வாங்கிக்கொண்டாள்.
 
“நான் இனிமே வீட்டுல ராஜா. சாரி, ராணி. தம்பிய நான்தான் இனிமேல் அவனை பார்த்துப்பேன்” அப்படின்னு சொல்லிட்டு தம்பிக்கு ஒரு முத்தம் கொடுத்தா.
 
இப்ப, அப்பாவும் அம்மாவும் யாழினிக்கு முத்தம் கொடுத்தாங்க. அவளுக்கு ஒரே சந்தோஷம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்