பால்வெளியின் கருந்துளை: வெளியானது புகைப்படம்!
16 வைகாசி 2022 திங்கள் 10:32 | பார்வைகள் : 12539
நமது அண்டவெளியில் பல்வேறு ஆச்சர்யமான விஷயங்கள் நிரம்பியுள்ளது. தற்போது பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த தெளிவற்ற வண்ணமயமான புகைப்படத்தை எட்டு சின்க்ரனைஸ்ட் செய்யப்பட்ட ரேடியோ தொலைநோக்கிகளின் தொகுப்பான ஈவண்ட் ஹாரிஸான் தொலைநோக்கியின் வெளியிடப்பட்டது.
இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கருந்துளைகளின் புகைப்படங்களை பிடிக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த கருந்துளை ஒரு இடத்தில நிலையாக இல்லாமல் குதித்து இருக்கிறது, இதனால் அவர்களால் படத்தை தெளிவாக பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தனர். மேலும் இது கருந்துளையின் முதல் புகைப்படமல்ல. முன்னதாக, இதே குழு 2019-ல் 53 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து கருந்துளையின் படத்தை வெளியிட்டது . இந்த பால்வெளி கருந்துளை சுமார் 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இதுகுறித்து வானியலாளர்கள் கூறுகையில், நமது விண்மீன் திரள்கள் உட்பட அனைத்தும் அவற்றின் மையத்தில் மிகப்பெரிய அளவிலான கருந்துளைகளைக் கொண்டுள்ளன, அந்த கருந்துளைகளில் இருந்து ஒளி மற்றும் பொருட்கள் எதுவும் வெளியேற முடியாது, அதோடு அவற்றின் படங்களைப் பெறுவதும் சற்று கடினமானதாகும் என்று கூறியுள்ளனர். மேலும் வெளியான அறிக்கைகளின்படி "ஒளியானது சூடான வாயு மற்றும் தூசியுடன் சேர்ந்து உறிஞ்சப்பட்டு புவியீர்ப்பு விசை காரணமாக வளைந்து சுற்றி திரிகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருந்துளையானது தனுசு A(நட்சத்திரம்) என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது தனுசு மற்றும் விருச்சிக விண்மீன்களின் எல்லைக்கு அருகில் உள்ளது. மேலும் இது நமது சூரியனை விட நான்கு மில்லியன் மடங்கு பெரியது ஆகும்.