Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை - விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை - விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

4 மார்கழி 2021 சனி 08:25 | பார்வைகள் : 9558


விண்வெளி குப்பைகள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெளியே மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விண்வெளி நடையை (spacewalk) செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்க விண்வெளி நிறுவனமான  NASA ஒத்திவைத்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விண்வெளி வீரர்களான தாமஸ் மார்ஷ்பர்ன் மற்றும் கெய்லா பரோன் ஆகியோர் விண்வெளி நடையை மேற்கொள்ளவிருந்தனர்.  தகவல்தொடர்பு ஆண்டெனாவில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்பேஸ் வாக் செய்ய வேண்டி இருந்தது.

 
இந்நிலையில், "விண்வெளி நிலையத்தில் அதிக குப்பைகள் பற்றிய அறிவிப்பு நாசாவிற்கு கிடைத்துள்ளது" என்று விண்வெளி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
 
"விண்வெளி வீரர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை சரியாக மதிப்பிடுவதற்கான வாய்ப்பு இல்லாததால், கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை நவம்பர் 30 மேற்கொள்ள இருந்த விண்வெளி நடையை ஒத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என நாசா (NASA) தெரிவித்துள்ளது.
 
சென்ற மாதம் ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மூலம், தனது சொந்த பழைய செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்திய நிலையில், ​விண்வெளி மாசுபாட்டில் ஆயிரக்கணக்கான புதிய குப்பை பொருட்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய செயற்கைக்கோளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான குப்பைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சுற்றி நகரத் தொடங்கி, ஐஎஸ்எஸ் மீது மோதும் அபாயம் ஏற்பட்டது.
 
குப்பைகள் சூழ்ந்ததன் காரணமாக ISS எனப்படும் சர்வடேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களையும் தங்கள் விண் ஊர்திகளில் தற்காலிகமாக தஞ்சம் அடையச் செய்தது. சோதனைக்குப் பிறகு முதல் 24 மணி நேரத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டதாகவும் நாசா தெரிவித்தது.
 
செவ்வாய்க்கிழமை விண்வெளி நடையை நாசா ஒத்திவைத்தது ரஷ்ய விண்வெளி ஏவுகணை சோதனையின் குப்பைகள் காரணமாக இருந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் ரஷ்யாவின் பரிசோதனை விண்வெளி நிலையத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்