வானில் 25 கி.மீ உயரத்தில் மிதந்தபடி உணவருந்தும் சுற்றுலா தளம்
13 வைகாசி 2023 சனி 11:43 | பார்வைகள் : 8414
பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா நிறுவனம் ஒன்று, பூமிக்கு மேல் 25 கி மீ உயரத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து சென்று உணவருந்த வைக்கும் புதிய சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெஃபால்டோ(Zephalto) என்ற சுற்றுலா நிறுவனம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களை பூமிக்கு மேல் 25 கி மீ உயரம் வரை அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு உணவருந்தும் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஹீலியம் பலூனில் இணைக்கப்பட்ட கேப்சியூல் ஒன்றில் தங்களது சுற்றுலா பயணிகளை வான்வெளிக்கு அனுப்ப ஜெஃபால்டோ சுற்றுலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 6 பயணிகள் மற்றும் 2 விமானிகள் பயணிக்ககூடிய ஹீலியம் பலூன் கேப்ஸ்யூலில், சுற்றுலா பயணிகள் வானில் மிதந்த படி பூமியின் அழகை ரசித்து கொண்டே தங்களுக்கு விருப்பமான பிரெஞ்சு உணவுகள் மற்றும் மதுபானங்களை சுவைக்கலாம் என சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஹீலியம் பலூன் கேப்சியூல், ஒன்றரை மணி நேரத்தில் 25 கி மீ உயரத்தை அடையும் என்றும், பின் 3 மணித்தியாலங்கள் வரை வானில் மிதந்த படி இருந்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வெளியில் மிதக்கும் இந்த கேப்ஸ்யூலில் சுற்றுலா பயணிகள் ஒரு முறை பயணிக்க 1 கோடியே 8 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ஜெஃபால்டோ நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் நிலையில், 2024ம் ஆண்டிற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.