கைத்தொலைபேசி இணைப்பைச் சந்திரனில் ஆரம்பிக்கவுள்ள நாசா!
3 கார்த்திகை 2020 செவ்வாய் 17:29 | பார்வைகள் : 9388
கையடக்க தொலைபேசிகளுக்கான வலையமைப்பை சந்திரனில் நிர்மாணிப்பதற்கு நாசா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சந்திரனில் முதலாவது தொலைபேசி வலையமைப்புக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்காக நொக்கியா நிறுவனம் நாசாவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எதிர்கால மனித நடமாட்டத்தைக் கருத்திற்கொண்டு இது போன்ற முயற்சிகளைத் திட்டமிடுவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டளவில் மனிதர்களை நீண்டகாலம் சந்திரனில் தங்க வைப்பதற்கான திட்டங்களை நாசா நிறுவனம் நோக்காக கொண்டுள்ளது.
2022 ம் ஆண்டளவில் முதலாவது வயர்லெஸ் ப்ரோட்பாண்ட் தொடர்பாடல் முறைமை விண்வெளியில் நிறுவப்படும் என நொக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் முதலில் 4G தொழில்நுட்பத்தை நிறுவி பின்னர் படிப்படியாக 5G தொழில்நுட்பத் துக்கு மாற முடியும் என நொக்கியா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
விண்வெளி வீரர்களுக்கு குரல் மற்றும் வீடியோ பதிவுகளுடான தொடர்பாடலை விருத்தி செய்ய உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாசா நிறுவனத்தினால் சந்திரனில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு நடவடிக்கைகளுக்கு நொக்கியா நிறுவனத்தின் தொடர்பாடல் வலையமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.