Paristamil Navigation Paristamil advert login

நிலவில் நீராதாரம் - நாசா விஞ்ஞானிகள் தகவல்

நிலவில் நீராதாரம் - நாசா விஞ்ஞானிகள் தகவல்

28 ஐப்பசி 2020 புதன் 05:20 | பார்வைகள் : 9214


நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. தொடர்ந்து, 2009ல் வெளியான நாசா ஆய்வு முடிவுகளின்படி நிலவின் மேற்பரப்பில் சிறிய அளவிலான நீர் மூலக்கூறுகள் உள்ளது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு ஆய்வில், சூரியஒளி படாத நிலவின் தென்துருவப் பகுதியில் பனிக்கட்டி வடிவில், 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீராதாரம் உள்ளதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில்,மேரிலாந்தில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்திலிருந்து, சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, பூமியிலிருந்து கண்ணுக்குப் புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, நீண்டகாலமாக சூரியஒளி படாத பனித் திட்டுகளில் மட்டுமின்றி, நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்துள்ளதாக, ஆய்வுக்குழு தலைவரான கேசி ஹொன்னிபால் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆய்வுகளின்படி அல்லாமல், எதிர்பார்த்ததை விட அங்கு மிகப்பெரிய அளவில் நீராதாரம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வுக் கலன்கள் நிலவை அடையும்போது, குடிநீர் அல்லது எரிபொருளுக்கான மூலப்பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்