சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில இயற்கை வழிகள்!!
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9318
மாசடைந்த காற்றில் நீண்ட நேரம் இருந்ததால், சரும செல்களானது பாதிக்கப்பட்டிருப்பதுடன், சருமத்தில் இறந்த செல்கள் அதிகரித்து, முகமே பொலிவிழந்து காணப்படும். ஆகவே உங்கள் முகம் மீண்டும் பொலிவைப் பெற சருமத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, பளிச்சென்ற பொலிவான முகத்தைப் பெற முகத்திற்கு மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை போட்டு பராமரிக்க வேண்டும். இங்கு அப்படி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை பின்பற்றி பொலிவோடு மின்னுங்கள்.
சர்க்கரை ஸ்கரப்
சர்க்கரையை லேசாக பொடி செய்து கொண்டு, அதில் சிறிது தண்ணீர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சர்க்கரையானது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை வெளியேற்றிவிடும்.
எலுமிச்சை ஸ்கரப்
எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதனைக் கொண்டு முகம் மற்றும் கை கால்களை ஸ்கரப் செய்தால், பளிச்சென்று இருக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் சிறிது ரோஸ் வாட்டர், கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.
பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஜூஸ்
பப்பாளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமம் அழகாக காணப்படும்.
கற்றாழை மாஸ்க்
கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சுத்தப்படுத்தும் தன்மை, ஈரப்பதமூட்டும் தன்மை போன்றவை நிரம்பியிருப்பதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். அதற்கு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி விட்டு, பின் கற்றாழை ஜெல்லில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை ஒரு பிரஷ் பயன்படுத்தி சருமத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக மாறுவதோடு, ஜொலிக்கவும் செய்யும்.
தேன் மற்றும் ஓட்ஸ் மாஸ்க்
இந்த கலவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் நீக்க உதவும். அதற்கு ஓட்ஸில் தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.