மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சோதனை முயற்சி அடுத்தாண்டு முதல்
12 ஐப்பசி 2019 சனி 04:01 | பார்வைகள் : 9548
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் க்ரூ டிராகன் கேப்சூலின் சோதனை அடுத்தாண்டு நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் போயிங் கோ ஆகியவற்றுடன் இணைந்து சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மனிதர்களை சர்வதேச விண்வெளி தளத்துக்கு அனுப்பி வைக்கும் விண்கலத்துடன் கூடிய ஏவுகணையை கட்டமைத்து வருகிறது. இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், க்ரூ டிராகன் கேப்சூல் கட்டமைப்பு பணி தாமதமாக்கப்படுவதற்கு அண்மையில் நாசா டுவிட்டர் மூலம் எலன்மஸ்க் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள எலன் மஸ்க் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு சென்ற நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன், விண்கலம் கட்டமைப்பு பணிகள், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விண்கலம் கட்டமைக்கும் பணியை எலன்மஸ்க் வேகமாக செய்து வருவதாக கூறி புகழ்ந்தார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்த விண்கலத்தின் சோதனை முயற்சி அடுத்தாண்டு முதல் 4 மாதங்களில் நடைபெறும் என அப்போது ஜிம் தெரிவித்தார்.
மேலும் வீரர்களை அனுப்பும் முதல் முயற்சி என்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த சோதனை முயற்சி தாமதப்படலாம் எனவும், எந்தவித அபாய செயலிலும் ஈடுபட விரும்பவில்லை எனவும் கூறினார். விண்வெளி பயணத்தின் போது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக விண்கலத்திலிருந்து பாராச்சூட் வழியாக வெளியேறுவது மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான சோதனை பணிகள் நடந்து வருவதாக கூறினார். அதற்கான பணியில் மஸ்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் நாசா தலைவர் ஜிம் தெரிவித்துள்ளார்.