செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்..!
2 ஐப்பசி 2019 புதன் 05:31 | பார்வைகள் : 9470
செவ்வாய் கிரகத்தில் மக்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
இதுகுறித்து நாசா விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும் செயற்கை கோளில் ஒரு மைக்ரோ சிப் வைக்கப்படும் என்றும் இந்த சிப் செவ்வாய் கிரகத்தில் வைக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர்களை https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களை பதிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆராய ரோவர் 2020 என்ற செயற்கை கோள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏவப்பட உள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.