டுபாயில் உருவாகும் செவ்வாய் கிரகம்!
3 ஐப்பசி 2017 செவ்வாய் 11:12 | பார்வைகள் : 9615
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ பயிற்சி அளிக்கும் வகையில் ஐக்கிய அமீரகத்தில் உள்ள டுபாயில் மாதிரி உலகம் உருவாக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் ஐக்கிய அமீரகம் களமிறங்கியுள்ளது.
இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்படுகிறது.
அதற்காக 1.9 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது. இது டுபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. அதற்காக 100 மில்லியன் பவுண்ட் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் நடைபெற உள்ள ஐக்கிய அமீரக நாடுகளின் கூட்டத்தில் வெளியாகிறது.
இந்த மாதிரி உலகத்தில் மனிதர்களை தங்க வைத்து செவ்வாய் கிரகத்தில் வாழக் கூடிய சூழ்நிலை பயிற்சி உருவாக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் வெளி உலகத்தை அறியா வண்ணம் ஒரு வருடம் தங்கியிருக்க வேண்டும்.
மாதிரி உலகத்துக்குள் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். இது குறித்து டுபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் தெரிவிக்கையில், செவ்வாய் கிரகத்தில் மக்களை தங்க வைக்கும் முயற்சியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்கு முன்னோடியாக விளங்க ஐக்கிய அமீரகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியே இத்தகைய நடவடிக்கையாகும்.
இன்னும் 100 ஆண்டுகளில் அதாவது 2117-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியமர்த்த திட்ட மிட்டுள்ளோம் என்றார். குறித்த திட்டத்திற்காக உலகம் முழையில் இருந்து விஞ்ஞானிகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.