செவ்வாயில் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்த 'கியூரியாசிட்டி!
15 ஆவணி 2017 செவ்வாய் 11:07 | பார்வைகள் : 8447
சிவப்பு கிரகமான செவ்வாயில் தரையிறங்கி பயணித்து வரும் இயந்திரமய ஊர்தியான, 'கியூரியாசிட்டி'க்கு, இந்த ஆகஸ்ட், 5ம் தேதியோடு ஐந்து வயதாகிறது! அமெரிக்காவின் நாசா, 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அனுப்பிய இந்த ஊர்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு, இரண்டு லட்சம் படங்களை அனுப்பியிருக்கிறது. மிகத் துல்லியமான அந்தப் படங்கள், செவ்வாய் பற்றிய நம் புரிதலை வெகுவாக அதிகரித்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு வேலை செய்யும் என்ற திட்டத்துடன் தான் கியூரியாசிட்டி அனுப்பப்பட்டது. ஆனால், அதன் கட்டமைப்பும், தொழில்நுட்பமும் வலுவாக இருப்பதால், அதைவிட மூன்று ஆண்டுகள் கூடுதலாகவே கியூரியாசிட்டி உழைத்திருக்கிறது.
இடையில் அதன் மின்னணு கருவிகளில் கோளாறுகள், மென்பொருள் பிசிறுகள், கரடுமுரடான செவ்வாய் தரை, மேடு பள்ளங்களால் சக்கரங்களில் ஏற்பட்ட பழுதுகள் போன்றவற்றையும் தாண்டி பயணித்து வருகிறது கியூரியாசிட்டி ஊர்தி.
கடந்த இரு ஆண்டுகளில் அந்த ஊர்தி அனுப்பிய பல தகவல்கள், செவ்வாயில் முன்னர் உயிர்கள் இருந்திருக்கலாம் என்ற ஊகத்தை வலுப்படுத்தியுள்ளன. மேலும், அதன் கற்கள், பல அடுக்கு பாறைகள், தட்ப வெப்பம் போன்றவற்றை பற்றி பல ஆச்சரியகரமான தகவல்களை கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. கியூரியாசிட்டி, இதுவரை, 17 கி.மீ., துாரத்தை ஊர்ந்து கடந்துள்ளது.
அடுத்து, அதற்கு வைக்கப்பட்டுள்ள இலக்கு, தற்போது அது உள்ள இடத்திலிருந்து, 4.8 கி.மீ., துாரத்தில் உள்ளது. அதை அடையும் வரை, சக்கரங்கள் பழுதாகாமல் இருக்க, கூரிய கற்கள், கடும் மேடுகள் இல்லாத பாதையில் ஊர்தியை செலுத்த நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.