நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன்டொலருக்கு ஏலத்தில் விற்பனை!
22 ஆடி 2017 சனி 03:46 | பார்வைகள் : 9186
நிலவுக்குச் சென்ற முதல் மனிதரான அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது.
நிலவில் இருந்து தூசுப் பொருட்களைச் சேகரித்துவர அந்தச் சிறிய பை பயன்படுத்தப்பட்டது.
சோத்பி ஏல நிறுவனம் அந்தப் பையை ஏலத்தில் விட்டபோது, பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்கர் ஒருவர் பையை ஒன்றரை மில்லியன் டாலருக்கு வாங்கினார்.
ஏலத்துக்கான கட்டணமும் சேர்த்து அவர் 1.8 மில்லியன் டாலர் கொடுத்து பையைப் பெற்றுக்கொள்வார்.
தொடக்கத்தில் அது 2 மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை விலைபோகுமென மதிப்பிடப்பட்டது.
நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் கால் பதித்தபோது அந்தப் பையைப் பயன்படுத்தி நிலவில் இருந்து சிறிய கற்களையும் தூசுப் பொருட்களையும் சேகரித்து வந்தார்.
12 அங்குல நீளமும் எட்டரை அங்குல அகலமும் கொண்ட அந்தச் சிறிய பை, காலப்போக்கில் மறக்கப்பட்டுப் பின்னர் கைப்பற்றப்பட்டு ஏலமிடப்பட்டது.
2015-ஆம் ஆண்டில் அதை நான்சி என்பவர் 995 டாலருக்கு வாங்கினார்.
பையின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்க, அதை அவர் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பியபோது அதன் உரிமை பற்றிய சர்ச்சை உருவானது.
திருவாட்டி நான்சிக்கே அந்தப் பை சொந்தமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.