நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்!
1 ஆடி 2018 ஞாயிறு 17:22 | பார்வைகள் : 8920
வரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணத்தின் போது ‘Super Moon’, ‘Blue Moon' ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன.
இந்நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.
மேலும், கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும், இது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.
ஆசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.
இந்த கிரகணம் ஜூலை 27ஆம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும், நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.