ஏலியன் எலும்புக்கூடு பற்றிய இரகசியம் வௌியானது!
1 சித்திரை 2018 ஞாயிறு 12:43 | பார்வைகள் : 9084
சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 அங்குல அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தைப் போலவே இருந்த எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசியினுடையதாக இருக்கலாம் என அப்போது கருதப்பட்டது.
இந்நிலையில், அந்த எலும்புக்கூடு பற்றிய புதிய தகவல் வௌியாகியுள்ளது.
அந்த எலும்புக்கூடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அது மனிதனின் DNA வை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
உருவத்தில் தாயின் கருவின் அளவையும், எலும்பு வளர்ச்சியில் 6 வயதுக் குழந்தையின் அளவையும் கொண்ட இந்த எலும்புக்கூட்டிற்கு ‘அட்டா’ (Ata) என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்த எலும்புக்கூட்டின் தலை வேற்றுக்கிரகவாசியின் தலையைப் போல கூர்மையான வடிவில் இருந்தது. இதற்கு 10 விலா எலும்புகள் இருந்தன.
இவ்வாறு பல குறைபாடுகளுடனும் அது இருந்ததால், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்பட்டது எனவும், சாதாரண மனிதக் குழந்தையான இது, இறந்து பிறந்தோ அல்லது பிறந்தவுடன் இறந்தோ இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.