வேற்று கிரக உயிர்களை ஏற்க முடியுமா?
11 பங்குனி 2018 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 9144
வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என்று உறுதி செய்யப்பட்டால், அதை பூமியிலிருப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்வர்? அமெரிக்க விண்வெளித் துறையை சேர்ந்த சில விஞ்ஞானிகள், இணையத்தில் இது குறித்து முதல் முறையாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினர்.
அந்த கணிப்பின் முடிவுப்படி, பெரும்பாலானோர், அப்படி வேற்று கிரகத்தில் உயிரினம் இருந்தால் அதை நல்ல செய்தியாகவே பார்ப்பது தெரியவந்துள்ளது.
இணையத்தில் 500 பேரிடம், செவ்வாயில் உயிரினம் இருப்பது போல எழுதப்பட்ட செய்தியை தந்து, பூமியிலிருப்பவர்கள் எப்படி கருத்து சொல்வர் என, விஞ்ஞானிகள் கேட்டனர்.
மேலும், ஏற்கனவே வேற்று கிரகவாசிகள் குறித்து வந்த செய்திகள் சிலவற்றை, 250 பேரிடம் தந்து, அவர்களது கருத்தை கேட்டனர்.
இந்த இரு தரப்பிலும் கிடைத்த கருத்துகளை சேகரித்து, சொற்களை அலசும் மென்பொருளை வைத்து ஆராய்ந்தனர். அதன்படி, பெருவாரியான மக்கள் பூமிக்கு அப்பால் வேறு உயிரினங்கள் இருப்பது பற்றி அச்சம் ஏதும் தெரிவிக்காமல், வரவேற்கும் விதமாகவே கருத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இந்த ஆய்வு 'பிரான்டியர்ஸ் இன்' இணைய இதழில் வெளிவந்து உள்ளது.