வியாழ கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழையும் நாஸா விண்கலம்
5 ஆடி 2016 செவ்வாய் 09:27 | பார்வைகள் : 9278
சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் சுற்றுப் பாதைக்குள் அமெரிக்காவின் "ஜூனோ' விண்கலம் இன்று செவ்வாய்க்கிழமை நுழைகிறது.
வியாழ கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த பிறகு, அந்த விண்கலத்தின் முக்கிய இயந்திரம் செயல்படுத்தப்பட்டு, வியாழனைச் சுற்றி வரச் செய்யப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,
வியாழனில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம், செவ்வாய்க்கிழமை அந்த கிரகத்தில் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைகிறது. அதையடுத்து, அதன் திசைவேகத்தில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.
பூமியிலிருந்து ஜூனோவைக் கண்காணிப்பது, அது அனுப்பும் தகவல்களைப் பெறுவது ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக அந்த விண்கலப் பாதையில் மாற்றம் ஏற்படுத்தவே அதன் திசைவேகம் மாற்றப்படுகிறது.
அதையடுத்து, வியாழ கிரகத்தை ஜூனோ வலம் வரத் தொடங்கும். அதன் பிறகு, சக்தி வாய்ந்த ஆன்டெனாக்கள் மூலம் ஜூனோ தகவல்களை அனுப்பத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வியாழனில் உள்ள வேதிப் பொருள்கள், அதன் ஈர்ப்பு விசை, காந்தப் புலம், அந்த கிரகம் எவ்வாறு உருவானது போன்றவை குறித்து ஜூனோ விண்கலம் ஆய்வுமேற்கொள்ளும்.