செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்க தனியார் விண்கலம் பயணம்
29 சித்திரை 2016 வெள்ளி 18:21 | பார்வைகள் : 9722
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப போவதாக நாசா அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் அங்கு ஆட்களை குடியமர்த்த போவதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னோடியாக வருகிற 2018–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாத விண்கலத்தை இந்நிறுவனம் அனுப்புகிறது. இத்தகவலை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ கம்பெனியின் நிறுவனமும் தலைமை செயல் அதிகாரியுமான எலான் முஸ்ன் அறிவித்துள்ளார்.
‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ‘ரெட் டிராகன்’ என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் ராக்கெட் மூலம் இது அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தை வடிவமைக்க ஒத்துழைப்பு அளிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
தற்போது ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகம் மற்றும் வீரர்களுக்கு தேவையான பொருட்களும், உணவும் அனுப்பபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு (2017) இறுதியில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ஆட்களை அனுப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.