விண்வெளியில் ஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் சாதனை
12 மாசி 2016 வெள்ளி 08:00 | பார்வைகள் : 10386
விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன் அல்பர்ட் ஐன்ஸ்டீன் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வகுத்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் காலவெளியில் இருக்கும் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
நேற்று இது குறித்து வொஷிங்டன் தேசிய பத்திரிகையாளர் சந்திப்பில் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
அதில், விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் அல்லது சிற்றலைகள் தோன்றுகின்றன, இவைகள் அரை ஒளிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த ஈர்ப்பு விசை இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் அண்டம் தோன்றிய விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தில் மறைந்துள்ள பல மர்மங்களை கண்டறியவும் இது துணைபுரிகின்றது என கூறப்படுகிறது.
இதே போல் செயற்கைகோள் ஆய்வுகளின் போது புவியில் இருந்து ஏற்படும் ஒலி போன்ற இடையூறுகளை கடந்து ஆய்வுகளை எளிதில் மேற்கொள்வதற்கும் இந்த ஈர்ப்பு அலைகள் பயன்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகளின் இந்த அறிய கண்டுபிடிப்புக்கு ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்று இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் நடத்தப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.