புளுட்டோவில் மிதக்கும் மலைகள்: புதிய தகவல்களை வெளியிட்டது நாசா
7 மாசி 2016 ஞாயிறு 05:18 | பார்வைகள் : 10271
புளுட்டோ கிரகத்தில் மிதக்கும் பனி மலைகள் இருப்பதை, நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலம் படம் பிடித்து அனுப்பி உள்ளது.
புளுட்டோ கிரகத்தை ஆராய நியூ ஹாரிசான் விண்கலத்தில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள், புளுட்டோவின் மேற்பரப்பை பல கோணங்களில் படம் எடுத்து அனுப்பி உள்ளன. அவற்றை ஆய்வு செய்த நாசா, புளுட்டோவில் உறை நிலையில் நைட்ரஜன் பனிமலைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
நைட்ரஜன் பனிக்கட்டியை விட தண்ணீர் பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு என்பதால், உறைநிலையில் உள்ள நைட்ரஜனால் உருவான கடலில் இந்த பனிமலைகள் மிதக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியில் ஆர்க்டிக் கடலில் பெரும் பனிக்கட்டிகள் மிதப்பது போல் புளுட்டோவில் பனிமலைகள் மிதப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மலைகள் ஒரு கிலோ மீட்டர் முதல் பல கி.மீ. வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 14-ம் திகதி நியூ ஹாரிசான் விண்கலம் நெருங்கிச் சென்று படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.