செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியாவுடன் இணையும் பிரான்ஸ்
29 தை 2016 வெள்ளி 17:45 | பார்வைகள் : 10010
செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை இறக்கும் அடுத்த திட்டத்தில் பிரான்ஸும் இந்தியாவும் கூட்டிணைந்துள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி செவ்வாய் கிரகத்திற்கு உள்நாட்டு தயாரிப்பான பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் மூலம் மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளி பயண திட்டங்களில் மிகவும் குறைந்த பட்ஜெட்டாக ரூ.450 கோடி செலவில், செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்தது.
இதையடுத்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடும் முக்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பாவைச் தொடர்ந்து 4ஆவதாக இந்தியா இடம் பிடித்தது. செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தகவல் மற்றும் படங்களை மங்கள்யான் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளது. மங்கள்யான் அனுப்பிய படத்தின் மூலமாக செவ்வாயில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் நாசா உறுதி செய்து உலகுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்ள இந்தியா புதிய திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டத்தில், பிரான்ஸும் இணைவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஹொலண்டே ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். இரு தலைவர்களிடையே கையெழுத்தாகிய 14 ஒப்பந்தங்களில் ரபேல் போர் விமானம் வாங்குவது மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது பற்றி பிரான்ஸ் விண்வெளி நிறுவனத் தலைவர் ஜீயன் யுவஸ் லெகல் கூறுகையில், ‘‘செவ்வாயில் தரையிறங்குவது சுலபமானதல்ல. அப்படி இருந்தும், இந்த திட்டத்தில் மிகவும் விருப்பத்துடன் ஈடுபடுவோம். எங்களின் அறிவியல் தொழில்நுட்பங்களை செவ்வாய், வீனஸ் கிரகங்களின் ஆய்வுகளுக்கு இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வோம்’’, என்றார்.