Paristamil Navigation Paristamil advert login

சனிக் கிரகத்துடன் இரண்டறக் கலக்கவுள்ள கஸ்ஸினி!

சனிக் கிரகத்துடன் இரண்டறக் கலக்கவுள்ள கஸ்ஸினி!

7 சித்திரை 2017 வெள்ளி 09:18 | பார்வைகள் : 9127


 சனிக் கிரகத்தை ஆராயும் நோக்கில் இருபது வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்ட கஸ்ஸினி விண்கலம் தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

 
கஸ்ஸினியின் எரிபொருள் தீர்ந்து வருவதால், அதை சனிக் கிரகத்தின் தரையோடு மோதி செயலிழக்கச் செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது. அதற்கிடையில், மற்றொரு புத்தம் புதிய பணியையும் கஸ்ஸினி மூலம் செய்து முடிக்க நாஸா தயாராகியுள்ளது.
 
சுமார் பதினேழு ஆண்டு கால உழைப்பின் பின், சனிக் கிரகத்தை ஆராய்வதற்காக நாஸாவால் அனுப்பப்பட்டது கஸ்ஸினி. இதன் முழுப் பெயர் கஸ்ஸினி - ஹியூஜென்ஸ். கஸ்ஸினி என்பது விண் உலவி (ஓர்பிட்டர்). ஹியூஜென்ஸ் என்பது தரையுலவி (லேண்டர்). இவ்விரு பகுதிகளும் இணைந்ததாகவே காசினி திட்டம் உருவாக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்பட்ட கஸ்ஸினி, சனிக் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட நான்காவது விண்கலமாகும். எனினும், சனிக் கிரகத்தின் வளையப் பகுதியை அடைந்த ஒரே விண்கலம் இதுதான்.
 
1997ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கஸ்ஸினி, சுமார் ஏழு ஆண்டு இடைவிடாத பயணத்தின் பின் 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் திகதி சனிக் கிரகத்தின் வளையத்தின் புறப்பகுதியை அண்மித்தது. அன்று முதல் சனியின் வளையத்தை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது கஸ்ஸினி.
 
அதே 2004ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி கஸ்ஸினியில் இருந்து விடுபட்டது ஹியூஜென்ஸ். சனிக் கிரகத்தின் உப கிரகமான டைட்டனை ஆராயப் புறப்பட்ட ஹியூஜென்ஸ், 2005ஆம் ஆண்டு ஜனவரி, 14ஆம் திகதி டைட்டனை அடைந்தது. அன்று முதல் டைட்டன் பற்றிய தகவல்களை ஆராய்ந்து நாஸாவுக்கு அனுப்பி வருகிறது ஹியூஜென்ஸ்.
 
சனிக் கிரகத்தை ஆராய்ந்து வரும் கஸ்ஸினி, ஆச்சரியங்கள் நிறைந்த பல தகவல்களை இதுவரை சேகரித்துத் தந்திருக்கிறது. சனிக் கிரகத்தைச் சுற்றிலும் 62 நிலவுகள் இருப்பதையும், அதில் ஒன்றான ‘என்ஸிலாடஸ்’ தன்னகத்தே இருக்கும் சமுத்திர நீரைப் பனிக்கட்டியாக்கி அவற்றை விண்வெளியில் உந்தித் தள்ளுவதையும் கஸ்ஸினியே கண்டுபிடித்துச் சொன்னது. இதுபோன்ற பல தகவல்களை, சனிக் கிரகத்தின் ஆராயப்படாத பல பகுதிகளை துல்லியமாக ஆராய்ந்து விஞ்ஞானிகளுக்கு வழங்கிவருகிறது.
 
சனியின் மேற்பரப்பில் கஸ்ஸினியை மோதி அதன் இயக்கத்தை நிறுத்த முடிவுசெய்துள்ள நாஸா, அதற்கிடையில், சனிக்கும் அதன் வளையத்துக்கும் இடைப்பட்ட இருள் பகுதிக்குள் கஸ்ஸினியைச் செலுத்தி அப்பகுதியை ஆராயவும் முடிவுசெய்துள்ளது. இது, கஸ்ஸினியின் இறுதிப் பணியாக அமையவிருக்கிறது. இம்மாதம் 26ஆம் திகதி, ஒரு மணித்தியாலத்துக்கு சுமார் இரண்டாயிரம் கிலோமீற்றர் வேகத்தில் குறிப்பிட்ட இருள் பகுதிக்குள் இறங்கவுள்ளது கஸ்ஸினி.
 
இதுவரை அந்த இருள் பகுதி ஆராயப்படாமலேயே இருப்பதால், செயலிழக்கப் போகும் கஸ்ஸினியின் இறுதி நாட்களை அந்த இருள் பகுதிக்குள் செலுத்துவதன் மூலம் புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.
 
எனினும், அதீத வேகத்தில் ஊடறுத்துச் செல்லவுள்ள கஸ்ஸினி மீது, சனிக் கிரகத்தின் மேற்பரப்பிலோ அல்லது வளையத்தின் மேற்பரப்பிலே இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு சிறு பொருள் மோதினாலும் தமது நோக்கம் நிறைவேறாமல் போகும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
 
இந்த அதிவேகப் பயணத்தின்போது கஸ்ஸினி 22 தடவைகள் ‘குட்டிக்கரணம்’ அடிக்கவிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சனிக் கிரகத்தையும் அதன் வளையத்தையும் நெருங்கி ஆராயவுள்ளது கஸ்ஸினி.
 
இப்பயணத்தின்போது, சனியின் மேற்பரப்பின் தன்மை, வளையங்கள் எப்போது உருவாகியிருக்கக்கூடும், சனியில் உயிர்கள் வாழ வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பன குறித்தெல்லாம் கஸ்ஸினி தகவல் திரட்டித் தரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
 
கஸ்ஸினியின் இந்த இறுதிப் பயணம், இவ்வருடம் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முடிவுக்கு வரும் என்றும், அன்றைய தினம் சனிக் கிரகத்தின் மேற்பரப்பில் மோதும் கஸ்ஸினி, சனியுடன் இரண்டறக் கலந்து விடும் என்றும் நாஸா தெரிவித்துள்ளது.