104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை!
15 மாசி 2017 புதன் 16:28 | பார்வைகள் : 9667
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 104 செயற்கைகோள்களை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்துள்ளதுடன், குறித்த பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி - சி 37 (PSLV - C37) எனும் ஏவுகணை 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவியதன் மூலம் 37 செயற்கோள்களுடன் பரந்த ரஷ்ய ஏவுகணையின் சாதனையை முறியடித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. குறித்த ஆய்வு மையத்தால் உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
குறித்த ஏவுகணையில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 95 செயற்கைக்கோள்கள் என 104 செயற்கைக் கோள்களையும் (PSLV - C37) ஏவுகணை சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது.
குறித்த செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள், உளநாட்டு பௌதீக மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு ஏற்புடையதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.