அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது...!
9 ஆடி 2013 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 11157
அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது என்று தெரியவந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சூரியன். இதன் வெப்பம் படிப்படியாக அதிகரித்து பூமியில் உள்ள கடல்களையே வற்றச் செய்துவிடும். நீரே இல்லாத நிலையில் உயிர்கள் படிப்படியாக அழிந்து போய்விடும் என்கிறது புதிய ஆய்வு.
பூமிக்கு மிக ஆழத்தில் தப்பிக்கும் சில நீர் ஊற்றுகளில் சில நுண்ணுயிர்கள் மட்டுமே வாழும் நிலை உருவாகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதே நேரத்தில் மனித இனம் வேறு கிரகங்களில் குடியேறி தப்பிக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி உயிரியல் விஞ்ஞானியான ஜேக் ஓ மேலி ஜேம்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் சமீபத்தில் இங்கிலாந்தின் Royal Astronomical Society-ல் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்நாள் உண்டு. இது முடிந்தவுடன் அந்த உயிர்கள் மறைந்து போய்விடும். திடீர் இயற்கை மாறுபாடுகளால் அல்லது விண்கற்கள் தாக்குதல் (டைனோசார்கள் அழிந்தது மாதிரி) போன்ற காரணிகளாலோ அல்லது நீண்டகால இயற்கை மாறுதல் காரணமாகவோ இது நடக்கலாம். மொத்தத்தில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் இருக்கப் போவதில்லை என்கிறது இந்த ஆய்வறிக்கை.
நீண்டகால இயற்கை மாறுதலில் மிக முக்கியமான காரணமாக இருக்கப் போவது சூரியன் தான் என்கிறார்கள். சூரியனின் வாழ்நாள் முடிந்து முடிவு நெருங்க நெருங்க அதன் வெப்பம் மிக அதிகமான உச்ச நிலையை அடையும். அதன் ஒளியும் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகும். அப்போது பூமியில் ஒரு சொட்டு நீர் கூட மிஞ்சாது. நீர் உள்ளிட்ட எல்லா திரவங்களும் ஆவியாகிவிடும். கடல்களே ஆவியாகி வறண்டு பாலைவனங்களாகிவிடும் என்கிறார் ஜேக் ஓ மேலி.
மேலும் இந்த இயற்கை மாறுபாடுகளோடு கார்பன் டை ஆக்ஸைடின் அளவும் குறைந்துவிடும். கார்பன் டை ஆக்ஸைட் இல்லாவிட்டால் அதை சுவாசிக்கும் தாவரங்களும் அழிந்துவிடும். தாவரங்களின் அழிவோடு உயிர்களின் அழிவும் தொடங்கிவிடும். அத்தோடு கடல்களும் வற்றிவிட பூமியில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிடும். அத்தோடு பூமியில் உயிர்களின் கதை முடிந்திருக்கும்.
கார்பன் டை ஆக்ஸைடும், ஆக்ஸிஜனும் இல்லாத இந்த பூமிப் பந்தில் நைட்ரஜனும் மீத்தேனுமே நிரம்பி வழியும். பூமிக்கு மிக மிக ஆழத்தில் உள்ள நீர் தான் கொஞ்சம் தப்பும். அதில், சில நுண்ணியிர்கள் தப்பித்து உயிர் வாழலாம்.
இந்த இயற்கை மாற்றங்கள் தொடங்கும்போதே பூமியைப் போன்றே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களை மனிதன் கண்டுபிடித்து, அதில் குடியேறும் முயற்சிகளையும் ஆரம்பித்திருப்பான். இதனால் பூமியில் இருந்து மனித இனம் வேறு கிரகங்களில் தஞ்சம் புகவும் வாய்ப்புள்ளது. இந்த முயற்சியில் மனிதன் தோற்றால் அந்த இனமும் அடையாளம் இன்றி அழிந்துவிடும் என்கிறது இந்த ஆய்வு.