செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு
4 சித்திரை 2013 வியாழன் 10:36 | பார்வைகள் : 10747
செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி ஆராய்ந்து வருகிறது. இந்த விண்கலமானது, முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை கண்டுபிடித்துள்ளது.
இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும் போது, இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறுகிறது. அப்போது அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.
இந்த பெர்குளோரேட் உப்புகள் கண்டுபிடிப்பால், செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பூமியில் இருந்தவாறே செவ்வாயை சுற்றிப்பார்க்கலாம்
MSL எனப்படும் நாசாவின் செவ்வாய்க் கிரக விஞ்ஞான ஆய்வு கூடத்தின் ஒரு செயற்திட்டமாக செவ்வாய்க் கிரகத்தில் தற்போது தங்கி ஆராய்ச்சி செய்து வரும் ஒரு கார் வண்டியளவுடைய ரோபோட்டிக் விண் வண்டியாக கியூரியோசிட்டி விளங்குகின்றது. தற்போது செவ்வாயின் காலே எனப்படும் நிலப்பரப்பில் (Crater) ஆய்வு செய்து வரும் கியூரியோசிட்டி 2011 நவம்பரில் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. 8 மாதங்கள் பயணம் செய்து 2012 ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாயின் காலே நிலப்பரப்பில் உள்ள எயோலிஸ் பாலுஸ் எனும் இடத்தில் கியூரியோசிட்டி தரையிறங்கியது. அன்றைய தினம் தொடக்கம் இன்று வரை பூமிக்குப் பல புகைப்படங்களையும் தகவல்களையும் அனுப்பி வருகின்றது. செவ்வாயின் காலநிலை மற்றும் புவியியல் குறித்து முக்கியமாகப் பரிசோதனை செய்து வரும் இந்த ரோபோ இன் முக்கிய இலக்குகளாக அதன் தரை மேற்பரப்பில் நுண்ணுயிர் வாழ்க்கை அல்லது தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் உள்ளனவா என அறிவது விளங்குகின்றது.
இந்நிலையில் கியூரியோசிட்டியில் பொருத்தப் பட்டுள்ள 4 பில்லியன் பிக்சல் (33 MP) வலுவுள்ள பனொராமா எனும் கமெராவினால் எடுக்கப் பட்ட நவீன புகைப்படங்களைத் தொகுத்து 360 டிகிரி இல் அதன் சுற்றுப் தோற்றத்தைப் பார்க்க முடியும் விதத்தில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த புகைப்படத் தொகுப்பைப் பார்க்கும் போது செவ்வாய்க் கிரகத்துக்கு நேரில் போய் கியூரியோசிட்டியின் அருகே இருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தரும் என இவர்கள் கூறுகின்றனர்.
கியூரியோசிட்டியின் முன்னே பொருத்தப் பட்டுள்ள இரு கமெராக்கள் மூலம் பெறப்பட்ட 407 துல்லியமான படங்களைக் கொண்டு அன்ட்ரூ போட்ரோவ் எனும் புகைப்படவியலாளர் இந்த 360 டிகிரி சுற்றுத் தோற்ற புகைப்படத் தொகுதியை போட்டோ ஷொப்பில் உருவாக்கியுள்ளார். விண்வெளியில் கதிர் வீச்சு மற்றும் ஏனைய தடைகளைத் தாண்டி பல இலட்சம் கிலோமீட்டர்கள் கடந்தே பூமிக்கு இந்தப் புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றுள்ள போதும் பூமியில் இருந்து அதி நவீன கமெரா ஒன்றினால் எடுத்த புகைப்படங்கள் போலவே ஒரு சிறுதும் வேறுபாடின்றி இவை தென்படுவது வியக்கத் தக்க ஒன்றாகும்.