அதிவேக விண்கல் பூமியை மிக அருகே கடந்து செல்லும்! நாஸா அறிவிப்பு.
30 தை 2013 புதன் 10:30 | பார்வைகள் : 10532
எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி ஒரு அதிவேக விண்கல் பூமியை மிக அருகே கடந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 DA14 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் பூமிக்கு சுமார் 25,500 கி.மீ. தூரத்தில் வரவுள்ளது.
143,000 டன் எடையும் 148 அடி நீளமும் கொண்ட இந்த விண்கல் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவில் பாதியளவுக்கு உள்ளது. 25,000 கி.மீ. தூரம் என்ன ரொம்ப பக்கமா என்று கேள்வி கேட்கலாம். அண்டவெளியின் விஸ்தீரணத்தை நாம் உணர்ந்தால் இது எவ்வளவு சிறிய இடைவெளி என்பது புரியும்.
நமது தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் தான் பறந்து கொண்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்களைவிடப் பக்கமாக பூமியை நெருங்கிச் செல்லப் போகிறது இந்த விண்கல்.
1908ம் ஆண்டு இதே போன்ற ஒரு விண்கல் தான் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விழுந்து பல்லாயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள வனப் பகுதியை தரைமட்டமாக்கிவிட்டு, பேரழிவை ஏற்படுத்திவிட்டுப் போனது என்பது நினைவுகூறத்தக்கது என்கிறார் நாஸா அமைப்பின் விண்கல் எக்ஸ்பர்ட்டான டோன் இயோமேன்ஸ்.
"Tunguska Event" என்று அழைக்கப்படும் இந்த விண்கல் தாக்குதலால் சைபீரியாவின் அந்தப் பகுதி இன்னும் பனி படர்ந்து கிடக்கும் வெறும் தரையாகவே உள்ளது. அங்கு இன்னும் புல், பூண்டு முளைக்கவில்லை.
ஆனால், இந்த 2012 DA14 விண்கல் நம்மை எட்டிப் பார்த்துவிட்டுப் போகப் போகிறதே தவிர, பூமியில் மோதப் போவதில்லை என்று நாஸா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.