வானில் இன்று நிகழும் அதிசயம் : சூரியன், வௌ்ளி, பூமி ஒரே நேர்கோட்டில்..
6 ஆனி 2012 புதன் 07:57 | பார்வைகள் : 10709
சூரியன், வௌ்ளி, பூமி ஆகியன ஒரே தருணத்தில் நேர் கோட்டில் சந்திக்கும் அரிய சந்தர்ப்பத்தினை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் இன்று கிட்டியுள்ளது.
சூரிய குடும்பத்திற்கு சொந்தமான வௌ்ளி கிரகம், சூரியன், பூமி ஆகியன ஒரே தருணத்தில் நேர் கோட்டில் பயணிப்பது பௌதீக விஞ்ஞானத்தில் மாத்திரமன்றி ஜோதிட விஞ்ஞானத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நூறாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் ஏற்படும் அரிய நிகழ்வு இதுவென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.
சுமார் 105 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்ற வெள்ளிக்கிரக நகர்வை இலங்கையின் மேற்கு வானில் இன்று காலை முதல் காணக்கூடியதாக இருக்கும். சூரியனுக்கு மேலாக வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளிப் போல் மெதுவாக வெள்ளிக்கிரகம் நகரும் ௭ன்று வான்சாஸ்திர ஆராய்ச்சியாளர் அநுர சீ பெரேரா தெரிவித்தார்.
இது குறித்து அவர்தொடர்ந்தும் கூறுகையில் வெள்ளிக் கிரகத்தின் இந்த நகர்வானது 105 அல்லது 122 வருடங்களுக்கு ஒரு முறையே இடம்பெறும். வெள்ளிக்கிரகம் சுமார் 10 கோடியே 81இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலேயே காணப்படுகின்றது. இக்கிரகம் சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றிவர 224 நாட்களும் 16 மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றது.
௭வ்வாறாயினும் 1639 ஆம் ஆண்டு தொடக்கம் 1882 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெள்ளிக்கிரக நகர்வை அவதானிக்க வான் சாஸ்திரவியலாளர்கள் செயற்பட்டனர். இதன் பின்னர் தொடர்ந்தும் கணிப்புகளின் மூலம் வெள்ளிக்கிரக நகர்வை அவதானிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டனர்.
மேற்கு வானில் மேற்படி கிரக நகர்வை காலை 3.39 மணி தொடக்கம் அவதானிக்க கூடியதாக இருப்பதுடன் காலை 10.19 மணியளவில் தெளிவாக காண முடியும்.
அதன் பின்னர் சூரியனை வெள்ளிக்கிரகம் கடந்துவிடும்.
இந்த நகர்வை பார்ப்பதாயின் வெறும் கண்ணைக் கொண்டு பார்ப்பதை தவிர்க்குமாறும் கறுப்பு நிறக் கண்ணாடிகளைக் கொண்டு பார்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் சூரிய உதயம் காலை 5.55 க்கு இருப்பதால் இதன் பின்னரே இலங்கை மக்களுக்கு வெள்ளிக்கிரக நகர்வை காணக்கூடியதாக இருக்கும்.