கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள் இன்றும்
7 புரட்டாசி 2023 வியாழன் 06:51 | பார்வைகள் : 4959
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றும் தொடரும் என சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி அகழ்வுப்பணிகள் நேற்று ஆரம்பமாகின.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மற்றும் கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் நேற்று முன் தினம் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
கடந்த 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினத்துக்கு பிற்போடப்பட்டது.
அதன்படி, நேற்று குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு முன்னதாக புதைக்குழியில் இருந்து தோண்டப்பட்ட மண் வெளியே எடுக்கப்பட்டு தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதலாம் நாள் அகழ்வுப்பணிகள் நேற்று முடிவுறுத்தப்பட்டு குறித்த பகுதி காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் குறித்த பகுதிக்குள் நுழைந்த இராணுவ புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு தரப்பினர் அந்த பகுதியை புகைப்படமெடுத்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.