உயிரணுக்களோ கருமுட்டையோ கருப்பையோ ஆய்வகத்தில் வளரும் கரு
7 புரட்டாசி 2023 வியாழன் 11:47 | பார்வைகள் : 2159
ஒரு கரு உருவாகவேண்டுமானால், உயிரணுக்களும் கருமுட்டையும் வேண்டும். ஆனால், உயிரணுக்களோ, கருமுட்டையோ, கருப்பையோ இல்லாமல் ஆய்வகத்தில் கரு மாதிரி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள் இஸ்ரேல் நாட்டு அறிவியலாளர்கள்.
கருவுருதல் என்பது ஒர் அற்புதம். தந்தையின் உயிரணுக்களும், தாயின் கருமுட்டையும் இணைந்து கருவாகி, அதில் ஒரு இதயம் தோன்றி, அதற்கொரு உடலைக் கொடுத்து, இரண்டு செல்கள் இணைந்து வெறும் ஒரு செல்லாக துவங்கியது, தலை, கை, கால்கள் என வெளியேயும், மூளை, கல்லீரல், கணையம், சிறுநீரகம் என உள்ளுறுப்புகளாகவும் மாற்றம் பெற்று, சுமார் பத்து மாதங்களுக்குப் பின் ஒரு உயிராக உலகில் அவதரிக்க, இது அம்மாவைப் போலிருக்கிறதா அப்பாவைப்போலிருக்கிறதா என ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் அதன் பெற்றோர் திளைக்க, இப்படி இரண்டு செல்களை ஒரு குழந்தையாக கண் முன் நிறுத்திய கடவுளுக்குத்தான் நன்றி சொல்லத்தோன்றும், எந்த பெற்றோருக்கும்!
ஆனால், ஒரு பெண் கருவுற்று முதல் சில வாரங்களில்தான் கருச்சிதைவுகளும் அதிக அளவில் நிகழ்கின்றன. மெத்தக் கற்ற அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட அது ஒரு புதிராகவே காணப்படுகிறது.
இந்த முதல் சில நாட்களில் தாயின் உடலுக்குள்ளிருக்கும் அந்த கருவில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்த மனிதனின் அறிவு மிகக் குறைவே என்கிறார் இஸ்ரேல் நாட்டின் Weizmann Institute of Science என்னும் ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Jacob Hanna.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் உயிரணுக்களோ, கருமுட்டையோ, கருப்பையோ இல்லாமல் ஆய்வகத்தில் கரு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு அறிவியலாளர்கள்.
சமீப காலமாக மருத்துவ உலகில் அதிகம் பேசப்படும் ஒரு விடயம், ஸ்லெம் செல் சிகிச்சை என்பதாகும். மருத்துவ உலகைப் பொருத்தவரை, அதை எட்டாவது அதிசயம் என்றே கூறலாம். மருத்துவ உலகின் பல்வேறு துறைகளில் இந்த ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் மிக வேகமாக நடைபெற்றுவருகின்றன.
இதே ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தித்தான் தற்போது இஸ்ரேல் நாட்டிலுள்ள Weizmann Institute of Science என்னும் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உயிரணுக்களோ, கருமுட்டையோ, கருப்பையோ இல்லாமல் ஆய்வகத்தில் கரு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
உண்மையில், அதை கரு என்று சொல்லக்கூடாது, கரு மாதிரி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அது உயிரணுவும் கருமுட்டையும் இணைந்து உருவானது அல்ல!
அதாவது ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஒரு பெண் கருவுற்ற முதல் சில வாரங்களில்தான் கருச்சிதைவு ஏற்படுகிறது. அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறியவேண்டுமானால், அந்த கருவில் ஆய்வுகள் செய்யவேண்டும். ஆக, அப்படிப்பட்ட ஒரு ஆய்வுக்ககத்தான் இந்த கரு மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
தாயின் உடலுக்குள் 14 நாட்கள் வளர்ந்த ஒரு கரு எப்படி இருக்குமோ, அதேபோலத்தான் இந்த ஆய்வக கரு மாதிரியும் உள்ளது என்பதால், அந்த காலகட்டத்தில் எதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என்பது குறித்து அறிந்துகொள்ளவும், சிலருக்கு ஏன் கருவுற முடியவில்லை என்பதை அறிதல், மரபியல் நோய்களை ஆராய்தல் ஆகிய விடயங்களுக்காகவும் இந்த கரு மாதிரி உதவிகரமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
அறிவியலாளர்கள், சில ஸ்டெம் செல்களை தேர்வு செய்து, சில ரசாயனங்களின் உதவியுடன் அவற்றை நான்கு வகை செல்களாக மாற்றினார்கள்.
1. கருவாக மாறும் epiblast செல்கள்
2. தொப்புள் கொடியாக மாறும் trophoblast செல்கள்
3. ஆரம்ப கட்டத்தில் கருவுக்கு உணவளிக்கும் yolk sac ஆக மாறும் hypoblast செல்கள் மற்றும்
4. பின்னர் பனிக்குடமாக மாறும் mesoderm செல்கள்.
அறிவியலாளர்கள் இந்த செல்களில் 120 செல்களை தேர்ந்தெடுத்து, ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்க, அந்த செல்களில் ஒரு சதவிகிதம் செல்கள் ஆச்சரியத்துக்குரிய வகையில் உடனடியாக தங்களைத் தாங்களே மாற்றிக்கொண்டு, ஒரு கருவாக மாறின.
அது அப்படியே தாயின் உடலுக்குள் உருவாகும் ஒரு கருவைப்போலவே இருந்தது. அதை 14 நாட்கள் வரை வளரவிட்டு அதில் ஆய்வுகள் செய்ய இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஏனென்றால், 14 நாட்கள் அவரை அந்தக் கரு மாதிரியை வளர்க்க மட்டுமே சட்டம் அனுமதியளிக்கிறது.
ஆக, பல அறிவியலாளர்கல் இந்த ஆய்வை வரவேற்றுள்ள நிலையில், கருவுருதலில் ஆரம்ப நாட்களில் நிகழும் மாற்றங்கள், கருச்சிதைவுக்கான காரணங்கள், மரபியல் நோய்களுக்கான காரணங்கள் முதலான முக்கிய விடயங்களை அறிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்பதால், இந்த ஆய்வு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.