Paristamil Navigation Paristamil advert login

அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.?

அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.?

7 புரட்டாசி 2023 வியாழன் 14:40 | பார்வைகள் : 4322


நாட்டைக் காக்கும் ஜவான் ஷாருக்கான். ஒரு சம்பவத்தால் அவர் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அவரின் மனைவியான தீபிகா தன் கணவரைக் கொல்ல வந்தவரைக் கொன்று விட்டு, ஜெயிலுக்கு செல்ல அங்கு அவருக்கு குழந்தைப் பிறக்கிறது. அந்த குழந்தைக்கு அப்பாவின் அருமை பெருமை எல்லாம் சொல்லி, அவன் வளர்ந்து பெரியவனானதும் அப்பா தேசத்துரோகி இல்லை என நிரூபிக்க வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறக்கிறார். மகன் வளர்ந்து அம்மாவின் சத்தியத்தைக் காப்பாற்றுகிறானா? அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சமூக பிரச்சினைகளையும் இணைத்து பரபர ஆக்‌ஷன் காட்சிகளோடு சொல்லி இருக்கிறார் இயக்குநர் அட்லி.

அப்பா விக்ரம் ரத்தோர், மகன் அசாத் ரத்தோர் என இரட்டை வேடத்தில் படம் நெடுக பாலிவுட் பாட்ஷாவின் ஆட்சி தான். எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்திலும் ஷாருக் அப்ளாஸை அள்ளுகிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. காவல் துறையின் தலைமை அதிகாரி நர்மதாவாக நயன்தாரா. ஆக்‌ஷன் நாயகியாக அவரது எண்ட்ரி காட்சியே அதகளம். படத்தின் முதல் பாதியில் ஷாருக்கானுக்கு இணையாக காட்சிகளும் ஆக்‌ஷனும் நயன்தாராவுக்கு வைத்திருக்கிறார் அட்லி. ஆனால், இரண்டாம் பாதியில் நயன் மிஸ்ஸிங்.

வெப்பன் பிசினஸ் டீலர் காளீஸாக விஜய் சேதுபதி. உடல்மொழி ராட்சசன் இந்தப் படத்திலும் தன்னுடைய அசால்ட் உடல்மொழியால் கவர்கிறார். பாலிவுட் விஜய்சேதுபதிக்கு நிச்சயம் கம்பளம் விரிக்கும். போற போக்கில் அவர் பேசும் வசனங்கள் பட்டாசு. ஆனால், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக செதுக்க அட்லி கோட்டைவிட்டிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் தீபிகா படுகோன் கலங்க வைக்கிறார்.

வழக்கமான அட்லி படங்களின் மூலக்கதையாக ஜவானும், 'மணி ஹெய்ஸ்ட்', 'சர்தார்', 'முதல்வன்' என பல படங்களின் கலவையாக இருந்தாலும், பார்வையாளர்களை இழுத்து பிடித்து படம் பார்க்க வைக்க முக்கிய மூன்று காரணங்களாக அமைவது இசை, ஒளிப்பதிவு, ஆக்‌ஷன். அனிருத்தின் பின்னணி இசை, ஜிகே விஷ்ணுவின் கண்கவரும் ஒளிப்பதிவு, அனல் அரசு, யானிக் பென் உள்ளிட்ட ஆறு பேர் அடங்கிய குழு ஆக்‌ஷன் காட்சிகளை சிறப்பாக கையாண்டுள்ளது.

ஷாருக்கானின் முந்தைய படங்களிலும் மதம் சார்ந்து கடுமையான பிரச்சினைகள் கிளம்பியிருக்க, 'ஜவான்' படத்தில் விவசாயிகள் கடன், அரசு மருத்துவமனைகளின் தரம், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சு, மக்கள் தங்கள் வாக்குகளை அரசை தேர்ந்தெடுக்க சரியாக பயன்படுத்த வேண்டும் என தேர்தல் நேரத்தில் பாலிவுட்டிலும் ஷாருக்கானை வைத்து சீண்டி இருக்கிறார் அட்லி.

படம் துவக்கத்தில் இருந்தே எமோஷன் காட்சிகள், பிளாஷ்பேக் காட்சிகள் என நீண்டு கொண்டே செல்வது அயர்சி. அதுவும் முதலில் மெட்ரோ ஹைஜாக் நடக்கும் போது ஷாருக்கானின் எமோஷன், நயன் - ஷாருக் காதல் காட்சிகள் எல்லாம் சுத்தமாக எடுபடவேயில்லை. படத்தில் உயரதிகாரியாக வரும் நயன்தாரா, ஷாருக் பின்னணி குறித்து எதுவும் பெரிதாக தெரிந்து கொள்ளாமலேயே திருமணம் வரை செல்வதும், பின்பு அவருடைய பிளாஷ்பேக் தெரிந்து அவர் பக்கம் சாய்வது, சிறையில் இருக்கும் பெண்களுக்கான ஆயுதம், அவர்களை வைத்து அசாத் பல ஆபரேஷன் நடத்துவது என இப்படி பல விஷயங்கள் அபத்தமாகவும் மேலோட்டமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு காட்சியும் இப்படித் தான் நகரும் என கிளைமாக்ஸ் வரை மிக எளிதாக கணித்து விட முடிவது பலவீனம். அப்படியான கதையின் நீளத்தை கத்திரி போட பல இடங்களில் எடிட்டர் மறந்திருக்கிறார்.

முதல் பாதி பரபரப்பாகவும் இரண்டாம் பாதி எமோஷன், ஆக்‌ஷன் என நகரும் கதையை பிரம்மாண்டமான அதன் திரை அனுபவத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்.

ஷாருக்கான் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார் அவர் நடிப்பை குறை சொல்லவே முடியாது. கவர்ச்சிக்கு எப்போதும் போல தீபிகா படுகோனே பயன்படுத்தியுள்ளார். ஹிந்தி படம் என்றும் தோன்றாத அளவிற்கு தமிழ் படம் பார்த்த உணர்வு வருகிறது. மொத்தத்தில் இந்த படம் பல படங்களின் கலவையாக இருந்தாலும் ரஜினி நடித்த ஜெய்லர் படத்தின் புது வடிவம் தான் இது. நமது தமிழ்நடிகர்களுக்காகவும், பிரமாண்டதிற்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்