சூரிய நடுக்கம்
20 தை 2015 செவ்வாய் 18:12 | பார்வைகள் : 10534
நில நடுக்கம் நமக்குத் தெரியும். ஆனால் சூரிய நடுக்கம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நமது விஞ்ஞானிகள் சூரியனில் நடைபெறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சூரியனின் மேல்பகுதி பூமியைப் போல் பாறைகளால் அமைந்த தரைப்பகுதி கிடையாது. நெருப்புக்குழம்பாக அது கொதித்துக்கொண்டு இருக்கிறது. அதன் மேல்பகுதியில் வெடிப்புகளும் நடுக்கங்களும் நடந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு நடுத்தரமான வெடிப்பு இந்த மாதம் 12-ந்தேதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வெடிப்பான, அதன் தாக்கம் பூமிவரை இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சூரியப் புள்ளி AR2257 எனும் பகுதியில் வெளிப்பட்டது என்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம். அதன் விளைவாக மிகவும் அபாயமான கதிர்வீச்சு விண்வெளியில் பரவியது.
ஆனாலும் சூரியனுக்குள்ளிருந்து பெரிய அளவுக்குப் பொருள்கள் வெளித்தள்ளப்படவில்லை. அதனால் தொடர்ச்சியானதாகவோ பெரிய அளவுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.மின்காந்தப் புயல்கள் எதுவும் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய அபாயகரமான கதிர்வீச்சுகளைத் தடுத்துப் பூமியைப் பாதுகாக்கப் போதுமான அளவு பூமியின் சுற்றுப்புற விண்வெளி அடுக்குகள் இருக்கின்றன. ஆனாலும் தற்போதைய கதிர்வீச்சின் தாக்கம் இந்தியப் பெருங்கடலிலும் ஆஸ்திரேலியாவிலும் கடற்பயணத்தில் இருப்பவர்கள் மற்றும் ஹாம் ரேடியோ பயன்படுத்துபவர்களுக்கு 10 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கும் குறைவான அலைவரிசை ஒளிபரப்புகளைப் பாதிக்கிற அளவு இருந்துள்ளது.
தங்களின் தொலைத் தொடர்பு கருவிகள் கொஞ்ச நேரம் செயல்படாமல் போனதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்கிறது நாசா.