வால் நட்சத்திரங்களிலிருந்து பூமிக்கு தண்ணீர் வந்ததா?
12 மார்கழி 2014 வெள்ளி 23:24 | பார்வைகள் : 9608
பூமியிலுள்ள பெரும்பாலான தண்ணீர், வால்நட்சத்திரங்களில் இருந்து வந்திருக்கக்கூடும் என்ற கோட்பாடு தவறானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் Comet 67P என்ற வால் நட்சத்திரத்தில் தரையிறங்கிய ரொசிற்றா விண்கலத்தின் ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பனிப்படலம் படர்ந்த வால் நட்சத்திரத்திலுள்ள தண்ணீர், பூமியிலுள்ள தண்ணீருக்கு சமமானதாக இல்லை என்பதை ரொசிற்றா ஆய்வு புலப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வின் பெறுபேறுகள் சயன்ஸ் என்ற புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கட்டுரையை எழுதிய ஆய்வாளர்கள், விண்கற்கள் மூலம் பெருமளவு தண்ணீர் பூமிக்கு வந்திருக்கலாமென கூறுகிறார்கள்.
எனினும், வால் நட்சத்திரங்களில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த மேலதிக தகவல்கள் அவசியமென வேறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.