சந்திரனில் வாழ்விடங்களை அமைக்கும் புதிய திட்டம்
25 கார்த்திகை 2014 செவ்வாய் 06:50 | பார்வைகள் : 10257
விண்வெளி நோக்கிய உலக நாடுகளின் ஆய்வு நடவடிக்கைகள் சற்றே தீவிரம் பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது.
செவ்வாய்க் கோள் நோக்கிய அமெரிக்க மற்றும் இந்திய ஆய்வுத் தொகுதிகளின் விண்பயணம், அக்கோள் நோக்கி விண்வெளி வீரர்களை அனுப்புவது தொடர்பான அமெரிக்க நாஸா நிறுவனத்தின் ஒத்திகைகள் மற்றும் சீன நாட்டின் சந்திரன் நோக்கிய அண்மைய விண்பயணங்கள் என்றவாறான பல்வேறு வகையான விண்வெளி ஆய்வு முயற்சிகள் ஆய்வாளர்களால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 12 ஆந் திகதி வால்வெள்ளி ஒன்றில் ஆய்வுத்தொகுதியை தரையிறக்கும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முயற்சி நடந்தேறியது. எனினும், அம்முயற்சி முழு வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இவ்வாறாக பலநோக்கிலான ஆய்வு முனைப்புக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன.
விண்வெளிக்கு விண்வெளி ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ளுதல் என்பதற்கு அப்பால், அங்கு மனிதக் குடியேற்றங்களை நிறுவுதல், சுற்றுலாத் தலங்களை அமைத்தல் போன்ற விடயங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டுவருகின்றன. புவியின் மேற்பரப்புப் போன்று ஏனைய விண்பொருட்களின் மேற்பரப்புக்கள் மனித வாழ்விற்கு உகந்தவையாகக் காணப்படவில்லை. அம்மேற்பரப்புக்களில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற உவப்பான காலநிலை காணப்படாததுடன், ஆபத்தான அண்டவெளிக் கதிர்களின் தாக்கம், அதிகரித்த விண்பொருட்களின் மோதல் என்பவை உயிராபத்தினை ஏற்படுத்துபவையாகக் காணப்படுகின்றன.
விண்வெளியில் மனிதர் குடியேறுவதற்கு முன், மேற்குறிப்பிட்ட அபாயங்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் வாழ்விடங்களைக் கட்டமைப்பது என்பது கட்டாயமானது. அண்மையில், நெதர்லாந்தின் இல் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி தொழில்நுட்பக்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முப்பரிமாணப் பதியிகள் ஊடாக சந்திரனில் காணப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பான வதிவிடங்களை ஆக்கும் வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் 350 இற்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கலந்து கருத்துப்பரிமாறல்களை மேற்கொண்டனர்.
சந்திரனில் மனிதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தும் எண்ணம் ஈடேற வேண்டுமெனில், அதற்கான அனைத்து விநியோக நடவடிக்கைகளும் புவியிலிருந்தே மேற்கொள்ளப்படவேண்டும். எனவே, பாதுகாப்பான வாழ்விடக் கட்டமைப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துப் பொருட்களையும் புவியிலிருந்து கொண்டு செல்வதென்பது பாரிய செலவினை ஏற்படுத்துவதாக அமையும். ஆதலால், சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் மூலப்பொருட்களை முப்பரிமாணப் பதியி ஊடாக தேவைக்கு ஏற்ற வடிவமாக மாற்றியமைத்து, புவியிலிருந்து கொண்டு செல்லப்படும் அவசியமான கட்டமைப்புப் பொருட்களுடன் இணைத்து, சந்திரனில் உட்கட்டுமானங்களைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.
நடைபெற்ற கலந்துரையாடலில் முன்மொழியப்பட்ட திட்டத்தின் பிரகாரம், புவியிலிருந்து கொண்டுசெல்லப்படும் கட்டமைப்பு, காற்றினால் நிரப்பப்பட்டு கவிகை வடிவிலான வாழ்விடம் கட்டமைக்கப்படும். பின்னர்,
அதன் வெளிப்பகுதி, சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் மூலப்பொருட்களை முப்பரிமாணப்பதியி வாயிலாக உரிய வடிவங்கள் ஆக்கி காப்புறை இடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்காப்புறை சந்திரனின் உயர்வெப்பநிலை மாறல்கள் அகப்பகுதியைச் சென்றடையாமல் தடுப்பதுடன், அண்டவெளிக் கதிர்ப்புக்கள், விண்பொருள் மோதுகைகள் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பதாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இதன் மேற்பரப்பில் அமைக்கப்படும் பாதுகாப்புடன் கூடிய சாளரங்கள் சூரிய ஒளியை உள்ளே அனுமதித்து வாழ்விடத்தின் அகப்பகுதியை பகல் நேரங்களில் ஒளியூட்டும்.
சந்திரனின் மேற்பரப்பிலான வாழ்விடம், மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மூன்று புவி மாதங்களில் கட்டியெழுப்பப்பட இயலும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது, நான்கு விண்வெளி வீரர்கள் வதிந்து தமது ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போதுமான அகக் கனவளவினைக் கொண்டதாக காணப்படும். எதிர்வரும் 40 வருடங்களில் இவ்வகையான கட்டமைப்புக்கள் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகத்தினால் சந்திரனில் அமைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.