வால்நட்சத்திரத்தில் தரையிறக்கிய முதலாவது விண்கலம்
13 கார்த்திகை 2014 வியாழன் 11:35 | பார்வைகள் : 10352
சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர் விண்கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் தரையிறங்கியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான்.
இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின் மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர்.
எனினும், பிளே என்ற ரோபோ இயந்திரத்தின் கூரான கால்களைப் போன்ற பகுதிகள் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் சரியாக நங்கூரமிடத் தவறியதால், அதன் நிலை தெளிவாகத் தெரியவில்லையென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
ரொசிற்றா என்ற செய்மதியிலிருந்து அனுப்பப்பட்ட பிளே என்ற ரோபோ இயந்திரம் பூமியிலிருந்து 510 மில்லியன் கிலோமீற்றர் தொலைவிலுள்ள வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்கியது. எனினும், முதற்தடவை மேற்பரப்பைத் தொட்டு விட்டு அது மேலே கிளம்பிச் சென்றது. அதன் பின்னர் தான் மீண்டும் தரையில் கால் பதித்திருக்கக் கூடுமென செயற்றிட்ட முகாமையாளர் ஸ்ரீபன் உலமெக் தெரிவித்தார்.
இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளியினூடாக பறந்து கொண்டிருக்கையில் இந்த நுட்பமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.