வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் விண்கலம்
12 கார்த்திகை 2014 புதன் 07:55 | பார்வைகள் : 10052
பூமிக்கு 300 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் வால் நட்சத்திரத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஓர் ஆய்வு இயந்திரம் இன்று தரையிறக்கப்படவுள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அதனை செயற்படுத்தவிருக்கும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
67-பீ என அழைக்கப்படும் வால் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டிருக்கும் ரொசெட்டா விண்கலம் அதில் இருக்கும் பைலீ என்ற குளிர்சாதனப்பெட்டி அளவான ஆய்வு இந்திரத்தை இன்று அந்த வால் நட்சத்திரத்தின் மீது தரையிறக்கவுள்ளது. தாய் விண்கலம் மற்றும் தரையிறங்கும் இயந்திரம் சிறப்பான நிலையில் இருப்பதாக கட்டுப்பாட்டகம் அறிவித்துள்ளது.
தரையிறங்குவதற்கான கட்டளை கடந்த திங்கட்கிழமையே பைலீ இயந்திரத்திற்கு பிறப்பிக்கப்பட்டு விட்டதாக ஐரோப்பிய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை நேரப்படி இன்று மதியம் 2.05க்கு பைலீ இயந்திரம் ரொசட்டா விண்கலத்தில் இருந்து விடுபட்டு வால் நட்சத்திரத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. பின்னர் ஏழு மணி நேரம் கழித்து வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த நிகழ்வு பூமியில் இருந்து 510 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெறுவதால் ரொசெட்டா விண்கலத்தில் இருந்து பூமிக்கு செய்தி கிடைக்க 28 நிமிடங்கள் மற்றும் 20 விநாடிகள் தாமதிக்கின்றன. எனவே, ஆய்வு இயந்திரம் வெற்றிகரமாக தரையிறங்கியதா என்பதை பூமியில் இருக்கும் கட்டளையகத்திற்கு இலங்கை நேரடிப்படி இன்று இரவு 9.30 மணிக்கு பின்னரே உறுதி செய்ய முடியுமாக இருக்கும்.
“இந்த செயல்முறை சிறப்பாக முடிவதற்கு அதிஷ்டமும் தேவைப்படுகிறது” என்று இந்தத் திட்டத்தின் தலைவர் பவுலே பெர்ரி குறிப்பிட்டுள்ளார்.
வாத்து வடிவான வால் நட்சத்திரத்தில் பைலீ இயந்திரம் தரையிறங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடமும் முழுமையாக தட்டை வடிவானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி தோல்வி அடைந்தாலும் ரொசெட்டா விண்கலம் தொடர்ந்து வால் நட்சத்திரத்தை வலம் வந்து ஆய்வுகளை நடத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தரையிறங்கவிருக்கும் பைலீ இயந்திரம் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்பவுள்ளது. தொடர்ந்து அந்த இயந்திரம் விஞ்ஞான் ஆய்வுகளை முன்னெடுக்கும். வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில், இவற்றை ஆய்வு செய்யும் போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மணிக்கு 1.35 மில்லியன் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் 67-பீ வால் நட்சத்திரத்தை நோக்கி கடந்த 2004 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரொசெட்டா விண்கலம் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர் கடந்த ஓகஸ்டில் தனது இலக்கை எட்டியது. சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது நிலை கொண்டுள்ளமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவ தற்குத் தேவையான மின்னாற்றல் போதாமையால் 31 மாதங்களுக்கு தூக் கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப் பாட்டாளர்கள் முடிவெடித்தனர்.
2011 ஜூன் 8 ஆம் திகதி இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது. இது மீண்டும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 20 இல், தான் விழித்துக்கொண்டதாகப் பூமிக்குக் குறிப்பை அனுப்பியது. தொடர்ந்து அது வால் நட்சத்திரத்தை நோக்கிப் பயணித்தது, அடுத்தடுத்த மாதங்களில், 67-பீ இன் சார்பாக ரொசெட்டாவின் வேகத்தை மட்டுப் படுத்துவதற்காக சில அமுக்கி எரிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 2014 ஓகஸ்ட் 6 இல் அது 67பீ வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்டத்துள் நுழைந்தது.