பிரபஞ்சத்தை அழிக்கும் கடவுள் துணிக்கைகள்! விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்
16 புரட்டாசி 2014 செவ்வாய் 16:07 | பார்வைகள் : 10836
மிகப்பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அடையாளம் காணப்பட்டு வரும் ‘கடவுள் துணிக்கைகள்’ எனப்படும் ‘ஹிக்ஸ் போஸன்’ இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் (Stephen Hawking) எச்சரித்துள்ளார்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த ‘கடவுள் துகள்’ நிலையற்ற தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர்.
இதன் விளைவாக “பேரழிவு வெற்றிட சீர்கேடு” (Catastrophic vacuum decay) ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
‘கடவுள் துணிக்கை’ எனப்படுவது ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது. இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோவொரு முக்கியமான விடயமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
அது எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விடயம் தான் ‘ஹிக்ஸ் போஸன்’. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த ‘ஹிக்ஸ் போஸன்’ தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு ‘கடவுளின் அணுத் துகள்’ (God’s particle) என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.
டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, ‘ஹிக்ஸ் போஸன்’ துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.
இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் ‘ஹிக்ஸ் போஸன்’ என்ற ஒரு விடயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக நிறை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் ‘ஹிக்ஸ் போஸன்’ தான்.
ஹிக்ஸ் போஸன் என்று அழைக்கப்படும் கடவுள் துகளில் கவலைக்குரிய அம்சம் ஒன்று உள்ளது. அதாவது 100 பில்லியன் கிகா-எலக்ட்ரான் – வோல்ட்டிற்கும் அதிகமான ஆற்றலில் அது அதி நிலைத்தன்மை பெறலாம் என்கிறார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
இதன் அர்த்தம் என்னவெனில் பிரபஞ்சம் வெற்றிட சீர்கேடு என்ற பேரழிவுக்கு ஆட்பட நேரிடலாம், காரணம் உண்மையான வெற்றிடக் குமிழ் ஒளியின் வேகத்தில் விரிவாக்கம் பெறும். இத்தகைய நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது வருவதை நம்மால் பார்க்க முடியாது. இந்த அபாயம் அவ்வளவு எளிதாக நாம் மறந்து விடவோ, அலட்சியம் காட்டவோ முடியாத விஷயம் என்று ஸ்டார்மஸ் என்ற புதிய புத்தகத்திற்கு அவர் அளித்துள்ள முன்னுரையில் தெரிவித்துள்ளார்.