புளூட்டோவின் பின்னால் ஏதோ இருக்குது: நாசா கண்டுபிடிப்பு
29 ஆடி 2014 செவ்வாய் 10:29 | பார்வைகள் : 10347
அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதியதாக இரண்டு விண் பொருட்களை புளூட்டோவின் பின்புறப் பகுதியில் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக புளூட்டோவை ஆராய்ச்சி செய்துவந்த போது இந்த புதிய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்தொலைநோக்கியின் 200க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த போது இந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும், இதன் ஆராய்ச்சிக்காக விண்கலம் ஒன்று விரைவில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட உள்ளது. இதன் மூலம் வேறு சில சூரியக் குடும்பங்களும் அண்டத்தில் இருக்கலாம் என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது.
ஜூன் 16 முதல் ஜூன் 26 வரை பெறப்பட்ட இந்தப் புகைப்படங்களில் இப்பொருட்கள் பதிவாகி உள்ளன. மேலும், புளூட்டோவின் அடிப்பறப்பில் இரண்டு குயிபெர் மண்டலங்கள் காணப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. " எங்களுடைய ஆராய்ச்சியானது வீண் போகவில்லை. இதன் மூலமாக வானியல் ஆராய்ச்சியில் வேறு சில மண்டலங்களும் கண்டறியப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது " என்று வானியல் தொலைநோக்கி அறிவியல் மையத்தின் இயக்குனர் மாட் மவுண்டன் இக்கண்டுபிடிப்பு பற்றி மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாராய்ச்சியானது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொருட்கள்தான் நம்முடைய சூரிய மண்டலம் உருவாக மிக முக்கிய காரணமாக இருப்பவை. இதன் கண்டுபிடிப்புகளின் மூலமாக அண்டத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்களும் கண்டறியப்படலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.