பெண்களே சவால்களை எதிர்கொண்டால் சாதனையாளர் ஆகலாம்...
24 ஆடி 2023 திங்கள் 05:57 | பார்வைகள் : 7078
எந்த ஒரு தொழிலில் ஈடுபட விரும்பினாலும் கண்டிப்பாக யோசனை செய்ய வேண்டியது தான்.
யோசனையே இன்றி கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் இறங்கினோம் என்றால் அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.
ஆனால் நமது எண்ணம் வெறும் யோசனையாகவே இருந்து விட்டால் எந்தவித பயனும் இல்லை.
தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு நன்றாக யோசனை செய்த பின்னர் அதை ஆக்கபூர்வமாக செயல்படும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அபரிமிதமான ஆர்வத்தை முன்வைத்து களத்தில் இறங்க வேண்டும். சாதாரணமாக எந்த ஒரு செயலோ அல்லது தொழிலோ புரிய வேண்டுமானால், அதில் நிறையவே சிரமங்கள் உண்டு.
கஷ்டப்படாமல் எதிலும் வெற்றி பெறவும் இயலாது. ஏன், செயல்படவும் இயலாது.
எனவே மிக அதிக அளவு யோசனை மற்றும் ஆராய்ச்சியில் இறங்கினால் அதில் ஏராளமான பிரச்சினைகள், கஷ்டங்கள், பாதகங்கள் தென்படும்.
முடிவில் அந்த முயற்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் பெண்கள் ஓரளவு சிந்தித்து விட்டு தொழில்முனைவில் ஈடுபடவேண்டும்.
பிறகு அதில் வரும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். சாதாரணமாக மாத வருமானம் பெறுபவர்களுக்கும், தொழில் மூலம் சம்பாதிப்பவர்களுக்கும் தூரத்தில் இடைவெளி உண்டு. சமான்யமானவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வீடு, ஒரு வாகனம் என்ற அளவிலேயே இருப்பது கண்கூடாக காணும் உண்மை.
ஆனால் தொழில் மூலம் சம்பாதித்து பல வீடுகள், பல வாகனங்கள், ஏராளமான பணியாட்கள் என பொருளாதாரத்தில் மிகவும் மேன்மையுடன் திகழ்கின்றனர்.
இது தானாகவோ, வெகு எளிதாகவோ வந்ததாக நிச்சயம் இராது. இரவு, பகல் பாராது உழைத்து எண்ணற்ற சிரமங்களை சமாளித்து அவற்றை தக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது. திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம்.
யோசனை ஆக்கப்பூர்வமாக இருத்தல் வேண்டும். தடைக்கல்லாக இருத்தல் கூடாது. ஒரு ஆற்றை கடக்க வேண்டுமானால் அதன் பரப்பளவு முழுவதிலும் உள்ள ஆழத்தை எப்படி கண்டறிவது? ஆற்றில் இறங்கி மெதுவாக தடவித்தடவி செல்ல வேண்டியது தான்!
கடக்க இயலாத அளவு ஆழம் இருப்பின் மாற்று வழி தேட வேண்டியது தான்.
இல்லாவிடில் ஆற்றையே பார்த்துக்கொண்டு கரையிலேயே உட்கார வேண்டியது தான்.