திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி?
17 சித்திரை 2023 திங்கள் 17:44 | பார்வைகள் : 10932
திருமண வாழ்க்கை என்பது உடல் ரீதியாக இருவர் இணைகின்ற பந்தம் என்பதை தாண்டி மன ரீதியாக இணைய வேண்டும் என்பது தான் அடிப்படை. இனப்பெருக்கத்திற்கும், பேரின்பம் காணுவதற்கும் பாலுறவு அடிப்படையாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், ஆணும், பெண்ணும் உடல் ரீதியிலான நெருக்கம் காட்டிவிட்டால் மட்டுமே அந்த பந்தம் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிவிட முடியாது.
சுருக்கமாக சொன்னால், ஒரு உணவில் சுவையூட்டுவதற்கு உப்பு முக்கியம் தான். ஆனால், அந்த உப்பு மட்டுமே உணவாகிவிட முடியாது. அதுபோல தான் வாழ்க்கையும். பாலியல் உறவும் வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை என்று கருதிவிட முடியாது. இதை புரிந்து கொள்ளாத தம்பதியர்கள், தேனிலவு காலத்தில் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பதும், பின்னர் அந்த பந்தத்தை பலமானதாக வைத்துக் கொள்வது எப்படி என தெரியாமல் தவிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. ஆக, ஒரு பந்தம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்றால் பின்வரும் விஷயங்களையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
மரியாதை என்பது இயற்கையாக அமைய வேண்டிய விஷயம்தான் என்றாலும், சில சமயம் அதை நாமே வழிய முன்னெடுத்து செய்ய வேண்டியிருக்கும். மரியாதை மனசுல இருந்தா போதும் என்ற பழமொழி இங்கு வேலைக்கு ஆகாது. நீங்கள் எவ்வளவு மரியாதை கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிய வைக்க தவறினால் அதன் மூலம் ஒரு பலனும் கிடைக்காது. அதே சமயம், மரியாதை என்பது உங்கள் பார்ட்னரை கிண்டல், கேலி செய்யாமல், ஒருமையில் விமர்சிக்காமல் இருப்பது மட்டுமல்ல. அவர்களுடைய விருப்பங்கள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
ஒரு பந்தத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அதை முறியடித்து ஒற்றுமையை நிலைநாட்ட நம்பிக்கை என்பது அவசியமாகும். நமக்கு பிடித்திருக்கிறதோ, இல்லையோ எந்தவொரு விஷயத்தையும் நம் பார்ட்னர் மனப்பூர்வமாக விரும்புகிறார் என்ற எண்ணத்தை இந்த நம்பிக்கை ஏற்படுத்தும். ஆண், பெண் பந்தத்தில் நம்பிக்கை என்பது இல்லாமல் போனால், அதற்கடுத்து இணைந்து வாழ்வது சாத்தியமில்லை.
ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வாழுகின்றனர் என்றாலும் பல சந்தர்பங்களில் அவர்களது மனமும், சிந்தனையும் வேறு எங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. உடன் இருக்கின்ற பார்ட்னரிடம் மனம் விட்டு பேசி, சிரித்து மகிழுவதைக் காட்டிலும் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் எதை, எதையோ விவாதித்துக் கொண்டிருப்பார்கள். பார்ட்னருடன் உரையாடினால் மட்டுமே அவர்கள் மனதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த ஒற்றை வார்த்தையில் பல விஷயங்கள் அடங்கிவிடும். அது மரியாதை, ஆதரவும், நம்பிக்கை, அக்கறை என பலவற்றை உள்ளடக்கியதாகும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் உள்ள நல்லது, கெட்டது ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள பார்ட்னர் உடனிருக்கிறார் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அவர்களின்றி, அவர்களுக்கு தெரியாமல் செய்கின்ற எந்தவொரு விஷயமும் தவறாக முடியும்.
இன்றைய வாழ்க்கைச் சூழலில், ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அலுவலக பணிகளுக்காக செலவிடுகிறோம். இன்னொரு பங்கு நேரத்தை உறக்கத்திற்காக செலவிடுகிறோம். மீதமிருக்கும் 8 மணி நேரத்தில் நம்முடைய பயணம், நண்பர்கள் உடனான சந்திப்பு, ஷாப்பிங் என பல வேலைப்பாடுகளுக்கு மத்தியில் நம் பார்ட்னருக்காக பயனுள்ள நேரத்தை நாம் எவ்வளவு செலவிடுகிறோம் என்பது முக்கியமானது.