அருகில் இருபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? கண்டுபிடிப்பது எப்படி?
20 பங்குனி 2023 திங்கள் 00:16 | பார்வைகள் : 11187
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வேறு வகையான மனிதர்களை நாம் சந்தித்து வருகிறோம். அது உறவுகளாக இருக்கலாம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றக் கூடிய சக ஊழியர்களாக இருக்கலாம் அல்லது அக்கம், பக்கத்தினராக கூட இருக்கலாம். ஒருவருக்கு, ஒருவர் அன்பாகவும், உதவியாகவும் இருப்பதே ஆனந்தமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும் என்பதை கடைப்பிடித்து வருபவராக இருப்போம்.
ஆனால், அன்பும், உதவியும் கொடுத்து, திரும்ப பெறத்தக்க விஷயங்கள் தான். இருப்பினும் சில நபர்கள் எப்போதும் தங்களுடைய சுயநலம் குறித்து மட்டுமே சிந்திப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டார்கள். அத்தகைய நபர்களை கீழ்காணும் அறிகுறிகளுடன் கண்டு கொள்ளலாம்.
பிறரின் தேவைகளை பரிசீலிக்க மாட்டார்கள் : இரு தரப்பிலும் பலன் தரக் கூடிய பொது விஷயங்களில் இதை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதாவது, பரஸ்பரம் இருவரும் பலன் அடையும் வகையில் ஒரு காரியத்தை செய்கின்றபோது, அவர்களுக்கான தேவை முடிந்த பிறகு உங்களை மறந்து விடுவார்கள். உங்களுடைய தேவைகள் குறித்து பரிசீலனை செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு அலுவலக பைக் பார்க்கிங்கில் இருந்து நெரிசல்களுக்கு இடையே அவரது வாகனத்தை எடுக்க நீங்கள் உதவுவீர்கள். ஆனால், உங்களுக்கு உதவாமல் அவர் சட்டென்று பறந்து விடுவார்.
சமரசங்களை செய்ய மாட்டார்கள் : பொதுநலன் கருதி சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு இருக்காது. உதாரணத்திற்கு உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி சுற்றுலா செல்வதாக வைத்துக் கொள்வோம். உறவுகளில் அனைவரும் ஒருமனதாக ஊட்டி செல்வதாக முடிவெடுத்தால், அந்த நபர் மட்டும் கொடைக்கானல் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார். நீங்கள் கொடைக்கானலை தேர்வு செய்தால் அவர் வால்பாறையை தேர்வு செய்வார்.
திமிர்த்தனம் : தன்னைவிட யாரும் அறிவில் சிறந்தவர்கள் கிடையாது, தன்னை விட யாரும் திறமையானவர்கள் கிடையாது, தனக்கே அனைத்தும் தெரியும் என்ற மனோபாவத்துடன் செயல்படுவார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயங்களையும் கூட தெரிந்ததை போல காட்டிக் கொள்வார்கள். உதாரணத்திற்கு சாட் ஜிபிடி குறித்து விவாதத்தை தொடங்கினீர்கள் என்றால், அதைப் பற்றி தெரியாவிட்டாலும் அவர் கதைகளை அள்ளி விடுவார்.
சுய அனுபவம், சாதனைகளை பேசுவது : எல்லோருக்குமே சுய அனுபவம் மற்றும் சாதனைகள் போன்றவை இருக்கும். பரஸ்பரம் இரு தரப்பிலும் இதுகுறித்து விவாதிக்கும்போது அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆனால், சுயநல நபர்கள் உங்களை பேச விடாமல் வாயை அடைத்து விடுவார்கள். அவர்களுடைய சுய புராணத்தை மட்டுமே பாடிக் கொண்டிருப்பார்கள். நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை கேட்டாக வேண்டிய கட்டயாம் ஏற்படும்.
சக உறவுகள் அல்லது நண்பர்கள் ஒரு உதவியை செய்கின்றபோது அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும், பிறருடைய செயல்பாடுகள் நன்மை தரும்போது அதை பாராட்ட வேண்டும். ஆனால், சுயநலவாதிகளுக்கு இந்த எண்ணம் கொஞ்சம் கூட இருக்காது. நீங்கள் இமயமலையே ஏறிச் சென்று கொடிநட்டு திரும்பினாலும் கூட, இதெல்லாம் வீண் வேலை என்று ஏளனம் செய்வார்களே ஒழிய பாராட்ட மாட்டார்கள்.
நன்றி இருக்காது : சக உறவுகள் அல்லது நண்பர்கள் ஒரு உதவியை செய்கின்றபோது அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும், பிறருடைய செயல்பாடுகள் நன்மை தரும்போது அதை பாராட்ட வேண்டும். ஆனால், சுயநலவாதிகளுக்கு இந்த எண்ணம் கொஞ்சம் கூட இருக்காது. நீங்கள் இமயமலையே ஏறிச் சென்று கொடிநட்டு திரும்பினாலும் கூட, இதெல்லாம் வீண் வேலை என்று ஏளனம் செய்வார்களே ஒழிய பாராட்ட மாட்டார்கள்.
எல்லை மீறிச் செல்வது : ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு எல்லை இருக்கும். அது அவர்களுக்கு சௌகரியம் அல்லது பாதுகாப்பு தருவதாக அமையும். அதற்கு தலையிடும் யாரையுமே நாம் விரும்ப மாட்டோம். நாமும் அதுபோல பிறருடைய வாழ்வில் வரம்பு மீறி செயல்பட மாட்டோம். ஆனால், சுயநலவாதிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மூக்கை நுழைப்பார்கள். நாம் விரும்பவில்லை என்றால் அறிவுரையை அள்ளித் தெளிப்பார்கள்.