கணவன்-மனைவி சண்டை வருவது ஏன்?
13 பங்குனி 2023 திங்கள் 10:42 | பார்வைகள் : 11446
நீங்கள் அன்புக்காகப் பிறரைச் சார்ந்திருந்தால் அது துன்பத்தையே கொடுக்கும். சார்ந்திருப்பது ஒருவகை அடிமைத்தனம்தான். இதனால், நீங்கள் உங்கள் மன ஆழத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயலுவீர்கள். அதற்கு என்ன வழி என்று தேடுவீர்கள்.
பதில்: அன்பு அல்லது காதல் என்பது இரு வகைப்படும்.. 1, தேவையான அன்பு 2, அன்பளிப்பான அன்பு.
இந்தத் தேவைக்கான அன்பு அல்லது குறையுள்ள அன்பு எப்பொழுதும் பிறரைச் சார்ந்தே இருக்கும். இது முதிர்ச்சி அடையாத அன்பு. இது உண்மையான அன்பு கிடையாது.
இது தேவையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நீங்கள் பிறரை ஒரு கருவியாக உபயோகிக்கிறீர்கள். அவரை அதிகாரம் செய்கிறீர்கள். உங்கள் இஷ்டப்படி அவரை நடக்கச் செய்கிறீர்கள்.
இதனால், அவருடைய சுதந்திரம் பாதிக்கிறது. இதைப்போலத்தான் மற்றவரும் செயல்படுகிறார்கள். நீங்கள் அவரை உடைமையாக்கப் பார்க்கிறீர்கள். அவரும் உங்களை அப்படியே ஆக்க நினைக்கிறார்.
இப்படி அடுத்தவர்களை உபயோகப்படுத்த நினைப்பது அன்பற்ற செயல் . ஆனால், அது அன்பு போலவே தோற்றம் அளிக்கும். அது ஒரு போலியான அன்பு. ஆனால் 100- க்கு 99 சதவிகிதம் மக்கள் இதைத்தான் உண்மையான அன்பு என்று கருதி வருகின்றனர்.
ஏனென்றால், இந்தப் போலியான அன்பை நீங்கள் உங்கள் குழந்தைப்பருவம் தொட்டே கற்று வருகிறீர்கள். ஒரு குழந்தை தன் தாயிடம் அன்பைத்தான் எதிர்பார்கிறது. அது தாயைச் சார்ந்தே வளருகிறது. அந்தக் குழந்தை தன் தாயின்மீது வைக்கும் அன்பு இந்தக் குறையுள்ள அன்புதான். அது தன் வளர்ச்சிக்காகத் தாயை நேசிக்கிறது. இதை யார் செய்தாலும், அவரைத் தாய் என்றே அது நேசிக்கும்.
இவர்கள் வளர்ந்த பிறகும், அன்புக்காகப் பிறரை நாடுகிறார்கள். இவர்கள் மனதளவில் வளரவே இல்லை. முதலில் தாய், பிறகு காதலி அல்லது மனைவி.
எப்பொழுது ஒருவன், பிறரிடம் அன்பை எதிர்பாக்காமல் தானே பிறரிடம் அன்பு செலுத்துகிறானோ அப்போது அன்பில் வளர்ச்சி அடைந்தவனாக ஆகிறான். அவனிடம் ஏற்பட்ட அன்பு நிறைந்து வழிகிறது. அவன் அதைப் பிறரோடு பங்கிட்டு மகிழ நினைக்கிறான். இவன் பிறரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான்.
முதலில் பிறரிடமிருந்து வாங்குவதில் மகிழ்ச்சி அடையும் இவன், பின்னர் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறான். இதுதான் அன்பின் வளர்ச்சி. இதற்குப் பெயர்தான் உயிர்த்தன்மையானஅன்பு. இதுதான் நிறைவான அன்பு.
இப்பொழுது கணவன் மனைவிக்கான அன்புக்கு வருவோம்..
நீங்கள் அன்புக்காகப் பிறரைச் சார்ந்திருந்தால் அது துன்பத்தையே கொடுக்கும். சார்ந்திருப்பது ஒருவகை அடிமைத்தனம்தான். இதனால், நீங்கள் உங்கள் மன ஆழத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயலுவீர்கள். அதற்கு என்ன வழி என்று தேடுவீர்கள்.
அடுத்து நீங்கள் சார்ந்திருப்பவர், உங்களை அவர் அதிகாரம் செய்யவே முனைவார். அதைப்போல நீங்களும் அதிகாரம் செய்யத் தகுந்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருப்பீர்கள்.
இதன் விளைவு என்ன? சண்டைதான்! இதுதான் கணவன்-மனைவி அல்லது காதலியுடன் நடந்துகொண்டிருப்பது. இவர்கள் நெருங்கிய பகைவர்கள். தம்பதியர்கள் இதைத்தவிர வேறு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?